ஈரோடு ம.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நிலை குறைவு காரணமாக கோவை நீலாம்பூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (மார்ச் 28) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
2019 நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் ம.தி.மு.க சார்பில் ஈரோடு தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கணேச மூர்த்தி. இவர் கடந்த 5 ஆண்டுகளாக எம்.பி. ஆக இருந்து வருகிறார். தற்போது தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க கட்சிக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் துரை வைகா போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் கணேச மூர்த்தி கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அவர் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 3 தினங்களுக்கு முன் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதற்கிடையில் அவர் தற்கொலைக்கு முயன்றார் என்ற செய்தியும் பரவியது. இது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ம.தி.மு.க உருவானதில் இருந்து கணேச மூர்த்தி அக்கட்சியில் உள்ளார். 2016-ம் ஆண்டு இவர் கட்சியின் பொருளாளராக வைகோவால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மேல் சிகிச்சைக்ககாக ஈரோட்டில் இருந்து கோவை தனியார் மருத்துவமனை கணேச மூர்த்தி மாற்றப்பட்டார். அங்கு கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். இவரது இறப்பு கட்சியினர், பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தி உள்ளது.
தொடர்ந்து, கணேச மூர்த்தியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடல் பெருந்துறை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசோதனைக்கு பிறகு சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இன்று மாலை 5 மணியளவில் சொந்த ஊரான குமாரவலசு பகுதியில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“