/indian-express-tamil/media/media_files/2025/01/23/4XIu5NRTtgm8FKKl93Dv.jpg)
ஈரோடு அருகே 12 ஆம் வகுப்பு மாணவனை அடித்துக் கொலை செய்த சக மாணவர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் குமலன்குட்டை செல்வம் நகரை சேர்ந்தவர் சிவா. தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி சத்யா. இவர்களுடைய மகன் மற்றும் மகள் உள்ளனர். இதில் சிவாவின் மகனான ஆதித்யா (17) குமலன்குட்டை அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்தநிலையில், கடந்த புதன்கிழமை காலை ஆதித்யா பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார். ஆனால் ஆதித்யா பள்ளிக்கு செல்லவில்லை. மாலையில் பள்ளிக்கு அருகில் உள்ள பகுதியில் சீருடையில் இல்லாமல் சாதாரண உடையில் ஆதித்யா மயங்கி நிலையில் கிடந்தார். அவரை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆதித்யா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து ஆதித்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து ஆதித்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனையடுத்து, ஆதித்யாவின் பெற்றோரும், உறவினர்களும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றனர். அங்கு தங்களது மகனை அடித்துக்கொலை செய்த சக மாணவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். மேலும், கைது செய்யும் வரை மகனின் உடலை பெறமாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அப்போது ஆதித்யாவை கொலை செய்த மாணவர்களை கைது செய்யாவிட்டால் கலெக்டர் அலுவலகம் முன்பு எனது மனைவியுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என்றும் சிவா மிரட்டல் விடுத்தார். மேலும் அவர்கள் போலீஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி அழுதுகொண்டே அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். போலீஸ் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் சென்றதும் அவர்களை போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆதித்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஈரோடு டவுன் டி.எஸ்.பி முத்துக்குமரன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்பிரபு, மணிகண்டன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உறவினர்கள் கூறும் போது, ஆதித்யா பள்ளிக்கு வரவில்லை என்ற தகவலை பெற்றோருக்கு பள்ளிக்கூட நிர்வாகத்தின் சார்பில் தெரிவித்து இருக்க வேண்டும். மேலும் பள்ளி வேலை நேரத்தில் மாணவர்கள் வெளியே வந்துள்ளனர். ஆதித்யாவை 2 மாணவர்கள் தாக்கியதாக போலீசார் கூறி வந்தனர். ஆனால் தாக்குதல் வீடியோவை பார்க்கும்போது சுமார் 10 மாணவர்கள் சேர்ந்து ஆதித்யாவை அடித்து கொன்று உள்ளனர். எனவே அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் போலீஸ் நிலையத்துக்கு வரவேண்டும் என்றனர்.
அதற்கு உங்களது புகாரை எழுத்து பூர்வமாக எழுதி கொடுங்கள். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதன்பிறகு சமாதானம் அடைந்த அவர்கள் புகார் மனுவை கொடுத்தனர்.
இதையடுத்து ஈரோடு வீரப்பன்சத்திரம் கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் காரணமாக ஆதித்யா சக மாணவர்களால் தாக்கி கொலை செய்யப்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.
மேலும் ஆதித்யாவிடம் அதே பள்ளியில் படிக்கும் 2 மாணவர்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தங்களது வகுப்பில் படிக்கும் மாணவிகளுடன் பேசக்கூடாது என்று மிரட்டி தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த மாணவர்கள் தான் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து பள்ளிக்கு அருகில் உள்ள பகுதியில் வைத்து ஆதித்யாவை தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ஆதித்யா உயிரிழந்ததுள்ளதாக போலீசார் விசாரணையில் உறுதியானது.
இதைத்தொடர்ந்து போலீசார் மாணவர்கள் 2 பேரை கைது செய்தனர். இந்த கொலையில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று கைதானவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆதித்யாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.