ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினருக்கும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், த.பெ.தி.க-வினரைத் தாக்கியதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 50 பேர் மீது ஈரோடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெறுகிறது. இந்த இடைத் தேர்தலை அ.தி.மு.க, தே.மு.தி.க பா.ஜ.க கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்தன. அதே போல, த.வெ.க தலைவர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தல்தான் இலக்கு என்று கூறி ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலைப் புறக்கணித்தார். இதனால், இந்த இடைத் தேர்தலில் தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சியினர் நேருக்கு நேர் மோதுகின்றன.
தி.மு.க சார்பில் வி.சி. சந்திரகுமாரும், நா.த.க சார்பில் சீதாலட்சுமியும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். பிப்ரவரி 3-ம் தேதி மாலையுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில், இரு தரப்பு வேட்பாளர்களு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு இடையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி வருகிறார். பெரியார் பேசியதாக சீமான் குறிப்பிட்டு விமசித்தற்கு ஆதாரம் கேட்டு பெரியாரிய உணர்வாளர்கள் அவரது வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். பெரியார் குறித்த சீமானின் அவதூறு பேச்சுக்கு தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பெரியார் ஆதரவு இயக்கங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பெரியாரை சீமான் கடுமையாக விமர்சித்தார். இதற்கு சீமான் மீது கடுமையாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினருக்கும், தந்தை பெரியார் திராவிட கழகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பெரியாரை கடுமையாக விமர்சித்து வரும் சீமானை கண்டித்து, தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் துண்டறிக்கையை விநியோகித்தனர்.
அதே நேரத்தில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரும் அந்த பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையில் யார் துண்டறிக்கை கொடுப்பது என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், ஈரோட்டில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினரை தாக்கியதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீமான் குறித்து துண்டறிக்கை வழங்கிய தந்தை பெரியார் திராவிட கழகத்தினரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், 5 பிரிவுகளின் கீழ் ஈரோடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.