ஈரோடு மண்டல திமுக மாநாடு 2 நாள் நிகழ்ச்சிகளாக நடக்கிறது. இசை நிகழ்ச்சி, பட்டிமன்றம் ஆகியவற்றை தொடர்ந்து நிறைவில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.
ஈரோடு மண்டல திமுக மாநாடு ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் மார்ச் 24, 25-ம் தேதிகளில் (நாளை மற்றும் நாளை மறுநாள்) நடக்கிறது. முதல் நாள் காலை 9:00 மணிக்கு அரித்துவாரமங்கலம் பழனிவேல் நாதஸ்வர நிகழ்ச்சியுடன் மாநாடு துவங்குகிறது. காலை 10:00 மணிக்கு கோவி.செழியன் கொடியேற்றி பேசுகிறார்.
ஈரோடு மண்டல திமுக மாநாடு வரவேற்புக்குழு தலைவரும், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளருமான முத்துசாமி காலை 10:30 மணிக்கு வரவேற்று பேசுகிறார். மாநாட்டு தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திருச்சி சிவா மற்றும் பல்வேறு மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பேசுகின்றனர்.
முதல் நாள் (நாளை) மதியம் 3:00 மணிக்கு இசை நிகழ்ச்சி, 4:00 மணிக்கு பல்வேறு முக்கிய நிர்வாகிகளின் பேச்சு இடம்பெறும். திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் இதில் தொடக்க உரை நிகழ்த்துகிறார்.
ஈரோடு மண்டல திமுக மாநாடு 2-ம் நாள் நிகழ்ச்சிகள் 25-ம் தேதி காலை 9:00 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியுடன் தொடங்கும். காலை 10:00 மணி முதல் முக்கிய நிர்வாகிகள் உரையாற்றுகிறார்கள். 12:30 மணிக்கு திண்டுக்கல் லியோனி பட்டிமன்றம் நடக்கிறது. மதியம் 3:00 மணிக்கு இசை நிகழ்ச்சி, மாலை 4:00 மணிக்கு மாநாட்டு தீர்மானம் வாசித்தல், மாலை 6:00 மணிக்கு மாநாட்டு நிறைவு நிகழ்ச்சி நடக்கிறது.
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் 2-ம் நாள் இரவு 8:00 மணிக்கு பேசுகிறார். இரவு 8:30 மணிக்கு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாநாட்டு நிறைவுரை ஆற்றுகிறார். இரு நாட்களிலும் கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ரகுமான்கான் என முக்கிய நிர்வாகிகள் பேசுகின்றனர்.
ஈரோடு மண்டல திமுக மாநாடு காரணமாக பெருந்துறை விழாக் கோலம் பூண்டிருக்கிறது. மண்டல மாநாடு என பெயரிடப்பட்டிருந்தாலும் மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் வருகிறார்கள். ஒவ்வொரு மாவட்ட உடன்பிறப்புகள் தங்குவதற்கும் தனித்தனியாக திருமண மண்டபங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
திமுக மாநாட்டையொட்டி திராவிட இயக்க வரலாற்று கண்காட்சியை இரு தினங்களுக்கு முன்பு மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அந்த கண்காட்சியை காண கூட்டம் அதிகம் வந்தபடி இருக்கிறது. மாநிலம் முழுவதும் இருந்து பெருமளவில் தொண்டர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவர் முத்துசாமி ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கிறார்.