ஈரோடு: ஈரோட்டில் ஆர்.கே.வி.சாலை உள்ளிட்ட கடை வீதிகளில் தள்ளுபடி விலையில் ஜவுளிகளை வாங்குவதற்காக அதிகாலையிலேயே பொதுமக்கள் குவிந்தனர்.
ஜவுளி விற்பனைக்கு புகழ் பெற்ற நகரங்களில் ஒன்றான ஈரோட்டில் வாரம் தோறும் நடைபெறும் ஜவுளி சந்தையில், குறைந்த விலையில் அனைத்து வகையான ஜவுளிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் தீபாவளி பண்டிகை முடிந்து ‘ஸ்டாக் கிளியரன்ஸ்’ என்ற பெயரில், 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் இன்றும் ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளியை ஒட்டி, கடந்த சில நாட்களாகவே ஈரோட்டில் ஜவுளி விற்பனை நடைபெற்ற நிலையில் பண்டிகை முடிந்தும் புத்தாடைகள் 50 சதவீத தள்ளுபடி விலையில் கிடைப்பதால் துணிகள் வாங்க வந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
தீபாவளி பண்டிகை முடிந்து இன்றும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் தங்களது பிள்ளைகளுடன் வந்து தள்ளுபடி விலையில் ஜவுளிகள் வாங்குவதற்கு ஆர்வம் தெரிவித்து வருகின்றனர்.
அதிகாலை 4 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இந்த தள்ளுபடி என்பதால், ஈரோடு , கரூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடைவீதியில் குவிந்தனர்.