அமலாக்கத்துறை கைது நடவடிக்கையின் போது ஏற்பட்ட நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து மத்திய அரசு மருத்துவர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று (ஜூன் 13) அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதையும் படியுங்கள்: செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் ஆப்பரேஷன் பரிந்துரை: ஸ்டாலின் நேரில் சந்திப்பு
இந்தநிலையில் இன்று அதிகாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும் போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கைக்கு திமுக தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நிலை குறித்து மத்திய அரசு மருத்துவர்கள் குழு நேரில் ஆய்வு செய்தது. மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் சென்னை கே.கே நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையின் இருதயவியல் துறை சார்ந்த மூத்த மருத்துவர்கள் 4 பேர் அடங்கிய குழு அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து ஆய்வு செய்தது. இந்த குழு இ.எஸ்.ஐ மருத்துவமனையின் முதல்வரிடம் அறிக்கை வழங்கியுள்ளது.
இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சிகிச்சை செய்ய உள்ளதாகவும், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் சென்னை காவேரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil