கருணைக்கொலையை அனுமதிக்கக் கோரி ‘காமன் காஸ்’ என்ற தன்னார்வ அமைப்பு கடந்த 2005ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. ‘நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டவர்கள் குணமடைய வழியில்லாத நிலையில், மருத்துவமனையில் அவர்களுடைய சுவாசக் கருவிகளை அகற்றி கருணைக்கொலை செய்யும் நடைமுறை பல நாடுகளில் இருக்கிறது. அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு வாழ்வதற்கு மட்டுமின்றி சாவதற்கும் உரிமை வழங்கியிருப்பதால், கருணைக்கொலைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்’ என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
பல வருடங்களாக நிலுவையில் இருந்த இந்த மனு, கடந்த 2014ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் அடங்கிய சட்ட அமர்வுக்கு அனுப்பப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி மிஸ்ரா தலைமையிலான சட்ட அமர்வுக்கு முன் நேற்று நடைபெற்றது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ்.நரசிம்மா, “கருணைக்கொலையை அனுமதித்தால், அது தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. கருணைக்கொலை குறித்து தனிநபர்கள் முடிவெடுக்க முடியாது. வேண்டுமானால், மருத்துவக்குழு அமைத்து, அதன்படி முடிவெடுக்கலாம்” என்றார்.
தமிழகத்திலும் கருணைக்கொலை வேண்டி சில கோரிக்கைகள் எழுந்துள்ளன. அவற்றில் முக்கியமானது, ராஜிவ்காந்தி கொலைக் குற்றவாளியான ராபர்ட் பயஸ் தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதம். ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரோடு கைது செய்யப்பட்டவர் ராபர்ட் பயஸ். 1991ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட ராபர்ட் உள்ளிட்டவர்களுக்கு முதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் தமிழக முதல்வருக்கு ராபர்ட் பயஸ் எழுதிய கடிதத்தில், ‘கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறேன். இந்த நீண்ட சிறைவாசம் என்னை மட்டுமின்றி, என் குடும்பத்தையும் தண்டனைக்கு உள்ளாக்கியுள்ளது. 1999ஆம் ஆண்டு எனக்கு எதிரான வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான வாத்வா நான் குற்றமற்றவன் என்று அறிவித்த பிறகும் சிறை வாழ்க்கையைத் தொடர்வது வேதனையைத் தருகிறது. சிறையிலேயே என் வாழ்வு முடிய வேண்டும் என்றால், நான் இருப்பதைவிட இப்போதே ‘கருணைக்கொலை’ செய்து குடும்பத்திடம் என் உடலை ஒப்படைத்து விடுங்கள்’ என்று கூறியுள்ளார். இன்னொரு குற்றவாளியான முருகனும் தன்னைக் கருணைக்கொலை செய்துவிடுமாறு கூறியிருக்கிறார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகிலுள்ள தென்கரையைச் சேர்ந்த சையது அபுதாஹிர், நபீசா பேஹம் தம்பதியின் இரண்டு குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சிக் குறைபாடு. தங்களால் குழந்தைகளைப் பராமரிக்க முடியாததால், அவர்களைக் கருணைக்கொலை செய்ய அனுமதிக்கக்கோரி கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறார். அங்கிருந்து எந்தப் பதிலும் வராத நிலையில், சில மாதங்களுக்கு நோய்வாய்ப்பட்டு முன்பு மூத்த மகன் இறந்துவிட, இளைய மகனுக்காவது கருணைக்கொலை மூலம் விடிவு பிறக்காதா எனக் காத்திருக்கின்றனர் தம்பதிகள்.
இவர்கள் விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறது தமிழக அரசு?