சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
"ஈவிகேஎஸ் இளங்கோவன் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்; எப்போதும் தன் மனதில் பட்டதைப் பேசிவிடக் கூடிய பண்புக்குச் சொந்தக்காரர் மற்றும் மகன் இறந்த கவலைகளை மீறி மக்கள் பணிகளை செய்து வந்தார் ஈவிகேஎஸ்" என்று கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
"ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழக மக்களின் நலனுக்காக பாடுபட்டவர்; காங்கிரஸ் மற்றும் பெரியாரின் கொள்கைகளுக்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர்" என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
தவெக தலைவர் விஜய், “ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்; அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்”.
"கேப்டன் அவர்களுக்கு நல்ல நண்பர், பழகுவதற்கு இனிமையானவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்; அவருடைய இழப்பு குடும்பத்தாருக்கும், தமிழக காங்கிரஸ் அவரது கட்சி தொண்டர்களுக்கும் பேரிழப்பாகும்" என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
''உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடியவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்; அவருடைய மறைவு தமிழக அரசியல் களத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும்" என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
"தமிழ்நாட்டு அரசியலில் ஈவிகேஎஸ் பயணிக்க வேண்டிய தொலைவும் படைக்க வேண்டிய சாதனைகளும் ஏராளமாக இருந்த நிலையில் அவரது மறைவை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது". அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
”தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத பங்களிப்பு செய்த தலைவர்களில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் ஒருவர்; அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், அவரது குடும்பத்திற்கும் பேரிழப்பாகும். மேலும் ஈவிகேஎஸ் இளங்கோவனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
"அனைவராலும் தன்மானத் தலைவர் என்று போற்றப்பட்டவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்; எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பு; எதையும் வெளிப்படையாக பேசுபவர்" ஈவிகேஎஸ் இளங்கோவன் இறப்பு எனக்கு தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.
”காங்கிரஸ் கட்சிக்காக ஈவிகேஎஸ் இளங்கோவன் அர்ப்பணிப்போடு பாடுபட்டவர். தமிழக காங்கிரஸ் கமிட்டி மிகப் பெரிய தலைவரை இழந்துள்ளது” என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல் நாளை அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. சென்னை மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.