ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என்றும், அந்த பிரச்சாரத்தில் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா திடீரென காலமானார். அவரது இறப்புக்கு பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வருகின்ற பிப்ரவரி 27-ந் தேதி நடைபெறும் ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் திருமகன் ஈவெராவின் தந்தையும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பின் போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், "ராகுல் காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விரும்பினர். அவர்களது விருப்பத்துக்கு அடிபணிந்து நான் போட்டியிடுகிறேன். ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே திமுகவினர் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். அமைச்சர்கள் நேரு, முத்துசாமி உள்ளிட்டோர் பிரசாரத்தை மேற்கொண்டதற்கு நன்றி.
தமிழ்நாடு முதல்வ மு.க.ஸ்டாலின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். இந்த நம்பிக்கை காரணமாக இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம்", என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.