தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ இ.வி.கே.எஸ். இளங்கோவன், சேலம் விமான நிலையத்தை, சேலத்துக்கும் ஈரோடுக்கும் இடையில் சற்று நகர்த்தி வைக்க வேண்டும் என்று கூறியது சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.
சட்டப்பேரவையில் இ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது; “சென்னையில் காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தியின் சிலையை அமைக்கப் போகிறோம் என்று அறிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த அறிவிப்பின் மூலம், யாருக்கும் பகைவன் அல்ல, எல்லோருக்கும் நல்லவைகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கிறீர்கள் என்பதை முதலமைச்சர் சொல்லாமலேயே வெளிக்காட்டியிருக்கிறார். அதனால், அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த விமான நிலையம் பற்றி பேசினார்கள், சட்டமன்ற உறுப்பினர் அருள் சேலம் விமான நிலையம் பற்றி பேசினார். ஆரம்பத்தில் இருந்து சேலம் விமான நிலையம் பற்றி சில காலம் நாம் இன்றுவரை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். 6 மாதம் ஓடும், பிறகு மூடிவிடுவார்கள். பயணிகள் அதிகமாக வருவதில்லை என்ற காரணத்தால் மூடிவிடுவார்கள். என்னைப் பொறுத்த வரை அது பயனுள்ள விமான நிலையமாக இருக்க வேண்டும் என்று சொன்னால், அதை கொஞ்சம் நகர்த்தி ஈரோடுக்கும் சேலத்துக்கும் நடுவில் வைப்பீர்கள் என்றால் கூறியபோது, சட்டசபையில் உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
தொடர்ந்து பேசிய, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், இபோது விமான நிலையம் இருக்கும் சேலத்தில் இருந்து ஓமலூர் செல்ல வேண்டுமானால் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் ஆகும். அதை கொஞ்சம் நகர்த்தி சங்ககிரியில் வைத்தால், நாமக்கல்லும் அதை உபயோகப்படுத்த முடியும், திருச்செங்கோடும் அதை உபயோகப்படுத்த முடியும். ஆகவே, முதலமைச்சர் இந்த கருத்துக்கு செவி சாய்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“