தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளது.
நேற்று தமிழக அரசு கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் எவ்வாறு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என கேள்வி எழுந்தது.
மேலும், எதிர்கட்சிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனையடுத்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு,
திட்டமிட்டபடி, மே 2ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேசைகள் ஒதுக்கப்படும். அதே நேரம் பெரிய தொகுதிகளுக்கு 30 மேசைகள் வரை வைத்து வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளது. இதுவரை அவற்றில் எந்த தவறும் நடக்கவில்லை. அப்படி ஏதேனும் புகார் இருந்தால் நிச்சயம் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று முழு ஊரடங்கு தொடர்ந்தால் என்ன செய்வது என்பது குறித்து ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும்.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக் கவசம், கையுறை மற்றும் சானிடைசர் வழங்கப்படும்.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் கால்குலேட்டர் மாதிரி. எனவே அவற்றை வைஃபை போன்ற எந்த வெளிப்புற தகவல் தொடர்பு மூலமாக எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது.
வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 234 தொகுதிகளுக்கும் பொது பார்வையாளர்கள் அமர்த்தப்படுவார்கள். இதேபோல கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கும் ஒரு பொது பார்வையாளர் அமர்த்தப்படுவார்.
மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலம் தொடங்கியுள்ளது.
வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகே பெண் காவலர்களுக்கு மட்டும் கழிவறை வாகனம் அந்த கண்டெயினர் லாரியில் வந்துள்ளது. வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அருகே வேறு ஏதேனும் வாகனங்கள் வந்தால் மட்டும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil