Advertisment

10% இட ஒதுக்கீடு: தமிழக காங்கிரஸ், சட்டமன்ற காங்கிரஸ் மாறுபட்ட நிலைப்பாடு?

உயர் சாதியினருக்கு 10% இடஓதுக்கீட்டு தீர்ப்பை வரவேற்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிவிப்பு; தீர்ப்புக்கு எதிரான தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானத்திற்கு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை ஆதரவு

author-image
WebDesk
New Update
10% இட ஒதுக்கீடு: தமிழக காங்கிரஸ், சட்டமன்ற காங்கிரஸ் மாறுபட்ட நிலைப்பாடு?

10% இடஓதுக்கீட்டு தீர்ப்பை வரவேற்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ள நிலையில், தீர்ப்புக்கு எதிரான தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானத்தை சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை ஆதரித்துள்ளார்.

Advertisment

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதிகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10% இடஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பை காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பதாக தெரிவித்தன. தீர்ப்பு வெளியான நாளே தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி தீர்ப்பை வரவேற்பதாக அறிவித்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதையும் படியுங்கள்: மாத வருமானம் ரூ 66,000 பெறுகிறவர் ஏழையா? அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஸ்டாலின் கேள்வி

அதில், ”பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. பொரும்பான்மையான நீதிபதிகள் ஆதரவாக தீர்ப்பளித்திருக்கிறார்கள். 103-வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் சரியா, தவறா என்ற விவாதத்தில் பெரும்பான்மையான நீதிபதிகள் சரி என்றே கூறியிருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 50 சதவிகித இடஒதுக்கீட்டு வரம்பை மீற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அனைத்து பிரிவினருக்குமான நீதியை அது வழங்கும் என்றால், அதனை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. இந்தியாவில் ஐந்தாயிரம் ஆண்டுகளாக சமூகநீதி என்பது இல்லை.

ஒரு சிலரை ஒதுக்கி வைக்க வேண்டுமென்ற நடைமுறையை அந்தக்காலத்தில் நீதி என்று சொல்லி அதனை அங்கீகரித்திருக்கிறார்கள். ஆனால், சுதந்திரம் பெற்ற பிறகு அந்த நடைமுறையை பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் உடைத்தெறிந்து நாடாளுமன்றத்தில் முதன் முறையாக அரசியல் சட்டத்தை திருத்தி இடஒதுக்கீட்டிற்கு வழிவகுத்தார்கள். தற்போது 75 ஆண்டுகள் ஆகிவிட்டன.

எனவே, இன்றைய நடைமுறையை பின்பற்றி இன்றைக்கு பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி முடிவெடுத்தது.

2005-2006 இல் இதற்கான முயற்சி டாக்டர் மன்மோகன்சிங் அரசால் எடுக்கப்பட்டது. 2014 இல் நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தயாரிக்கப்பட்டது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய 5 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது.

நீதிபதி ரவீந்திரபட் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார். தாழ்த்தப்பட்டோர் 38 சதவிகிதம் வறுமையில் உள்ளனர். பழங்குடியினர் 48 சதவிகிதம் பேர் உள்ளனர். பிற்படுத்தப்பட்டோரில் 33.1 சதவிகிதம் பேர் வறுமையில் வாடுகின்றனர். இவர்களுக்கு மேலும் சலுகைகள் வழங்க வேண்டுமென அவர் கூறுகிறார்.

தற்பொழுது பொதுப் பிரிவினருக்கு 27 சதவிகிதமும், எஸ்.சி பிரிவினருக்கு 15 சதவிகிதமும், பழங்குடியினருக்கு 7.5 சதவிகிதமும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இவை மேலும் மேம்படுத்த இயலுமா என்பதனை சட்ட வல்லுநர்களும், அரசியல் அறிஞர்களும், சமூக பங்கேற்பாளர்களும் விவாதிக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீட்டை எதிர்ப்பது என்பதும் சமூக நீதியாகாது. ஏனெனில், ஐந்தாயிரம் ஆண்டுகாலமாக சிரமப்பட்ட பெரும்பகுதி சமுதாயத்துக்கு சமூகநீதி வழங்கப்படவில்லை. இப்பொழுது எங்களுக்கும் வழங்குங்கள் என்று கேட்பது சரியானதாக இருக்கும்.

ஆனால், எங்களைப் போலவே பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினரும் சங்கடப்பட வேண்டும் என்று கூறுவது சமூகநீதியாகாது.. சமூகநீதி என்பது மனிதகுலத்திற்கே பொதுவானதேயொழிய எந்தவொரு தரப்பிற்கும் அது உரியதல்ல. எனவே, 10 சதவிகித இடஒதுக்கீடு சரியான நடவடிக்கை என கருதி, தமிழக காங்கிரஸ் அதனை இதயப்பூர்வமாக வரவேற்கிறது," என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உயர்சாதியினருக்கு  பொருளாதார அடிப்படையிலான 10% இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பா.ஜ.க, அ.தி.மு.க தவிர, தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, கம்யூனிஸ்ட்கள், வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் கலந்துக் கொண்டன. காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் செல்வபெருந்தகை கலந்துகொண்டார். இதில் 10% இடஒதுக்கீட்டை எதிர்த்து அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுக்கு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, "காங்கிரஸ் கட்சியின் சமூக நீதிக் கொள்கையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசுக்கு ஆதரவை தெரிவிக்கிறோம். தேசிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் காங்கிரஸின் பார்வை வேறு வகையில் இருந்தாலும், தமிழ்நாட்டில் சமூக நீதிக் கொள்கையை ஆதரிக்கிறோம். சமூக நிதீயை நிலைநாட்ட, தமிழ் மக்களின் நலனுக்காக முதலமைச்சர் எடுக்கும் முடிவுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்." என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

K S Alagiri Congress Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment