தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் பல இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், ஒரு கிடங்கில் சட்டவிரோதமாக குட்கா வைத்திருந்ததாக கிடங்கு உரிமையாளர் மாதவராவ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, இந்த வழக்கில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி, மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் எனப் பலருக்கு தொடர்பு இருப்பதாக சி.பி.ஐ குற்றஞ்சாட்டி 11 பேருக்கு எதிராக கடந்த 2022 சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கில் விசாரணை நடத்த ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இந்நிலையில் இன்று ( ஜூலை 8) இந்த வழக்கின் விசாரணையை சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
எம்.பி, எம்.எல்.ஏ-களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஆகஸ்ட் 2ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட சிறப்பு நீதிமன்ற பதிவுத் துறைக்கு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“