முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த தினம், செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 16) செய்தித்துறை மானியக் கோரிக்கை தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதனை அமைச்சர் சாமிநாதன் அறிவித்தார்.
அப்போது, "தமிழ் வளர்ச்சி துறை இரண்டு மண்டலங்களாக இயங்கி வந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனைப்படி இதனை ஆறு மண்டலங்களாக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. இளங்கலை தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு, முதன்முறையாக தமிழ் வளர்ச்சி துறையில் நேரடி நியமனம் மூலமாக 13 உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் எழுத்து தேர்வு நடைபெற்றுள்ளது. விரைவில் இதற்கான பணி ஆணை வழங்கப்படும்.
வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழில் எழுத்துகள் கட்டாயமாக இடம்பெறுவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கடி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான விழிப்புணர்வை, வணிகர்களிடம் ஏற்படுத்தி வருகிறோம். தமிழ் வளர்ச்சி துறை சார்பாக பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அவற்றில் பிப்ரவரி 21-ஆம் தேதி, உலக தாய்மொழி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினமான ஏப்ரல் 29-ஆம் தேதியை தமிழ் கவிஞர் நாளாகவும், வீரமாமுனிவர் பிறந்த தினமான நவம்பர் 8-ஆம் தேதி, தமிழ் அகராதியியல் நாளாகவும் அரசு சார்பில் ஆண்டு தோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இத்துடன் சேர்த்து ஜூலை 18-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாகவும், ஜனவரி 25-ஆம் தேதியை தமிழ் மொழி தியாகிகள் தினமாகவும் கடைபிடிக்கிறோம்.
இந்த ஆண்டு முதல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் 3-ஆம் தேதி, செம்மொழி நாளாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்திய விடுதலை போராட்ட வீரர், மொழிப்பெயர்ப்பாளர் மற்றும் கவிஞரான க.ரா. ஜமதக்னிக்கு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் நினைவுத்தூண் நிறுவப்படும். அறிவியல் தமிழ் அறிஞரான 'மணவை' முஸ்தபாவின் பிறந்த தினமான ஜூன் 15-ஆம் தேதி, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மாவட்ட அரசு விழாவாக கொண்டாடப்படும். இதுமட்டுமின்றி, கவிக்கோ அப்துல் ரகுமானின் பிறந்த தினமான நவம்பர் 9-ஆம் தேதி, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
முன்னதாக, திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். ஆனால், இந்த கோரிக்கை இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பின்னோக்கு கலையரங்கம் அருகே ரூ. 50 லட்சம் செலவில் திருவள்ளுவரின் சிலை நிறுவப்படும்.
இது மட்டுமின்றி கோவை செம்மொழி பூங்காவில் தமிழ்த் தாய் உருவச் சிலை நிறுவப்படும். விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் நகராட்சியில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் கவிஞர் பாரதிதாசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.