பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் தற்போது வரை நீடிப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (மே 15) சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதன்படி, "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் எதற்காக அ.தி.மு.க-வை உருவாக்கினார்களோ, அதே திசையில் அ.தி.மு.க பயணிக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு.
கொடநாடு எஸ்டேட் வழக்கை துரிதப்படுத்தி, அதில் தொடர்புடையவர்களுக்கு விரைவில் தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தியது நாங்கள் தான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவினர் மட்டுமே இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
எந்தக் காலத்திலும் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று கூறியவர்களே, இன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அங்கம் வகிக்கின்றனர். ஆனால், நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டோம். அந்தக் கூட்டணியில் தான் இன்று வரை இருக்கிறோம். எங்களை பொறுத்தவரை இதே நிலைப்பாடு தொடர்கிறது.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் என்னை தோல்வி அடையச் செய்வதற்கு பல்வேறு சூழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இவை அனைத்தையும் மீறி அந்த தொகுதியில் சுமார் 3.4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றேன். இது எங்கள் தரப்பு நியாயத்திற்கு மக்கள் அளித்த மதிப்பாக கருதுகிறோம். மற்றவர்கள் குறித்து எங்களுக்கு கவலை இல்லை.
சென்னைக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எங்களை அழைக்காதது வருத்தம் தான். எனினும், யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எங்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்து விட்டோம்" எனக் கூறினார்.