சொத்துக் குவிப்பு வழக்கு: தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் மகன்கள், மகளுக்கு 3 ஆண்டு சிறை
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறைந்த தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் 2 மகன்கள், மகள், தம்பி மகள் உள்பட 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை விதித்து தீர்ப்பு
திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா துவரங்குறிச்சி அருகே உள்ள வேலக்குறிச்சியை சேர்ந்தவர் புலவர் பூ.ம.செங்குட்டுவன். திமுகவை சேர்ந்த இவர் கடந்த 1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலில் மருங்காபுரியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
Advertisment
இதனடிப்படையில் கடந்த 1996-2001-ம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சிக்காலத்தில் இவருக்கு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சராக மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞரால் பொறுப்பு கொடுக்கப்பட்டது.
1996-2001- காலகட்டத்தில் திமுக அமைச்சராக இருந்தபொழுது புலவர் செங்குட்டுவன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2003 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினரால் வழக்கு தொடரப்பட்டது. புலவர் செங்குட்டுவன் அமைச்சராவதற்கு முன்பு அவருடைய சொத்து மதிப்பு ரூ.3 லட்சத்து 63 ஆயிரத்து 219 ஆக இருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் பதவிக்காலம் முடியும் தருவாயில் அவருடைய மகன்கள், மகள்களின் சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 1 லட்சத்து 30 ஆயிரத்து 971-ஆக இருந்தது.
புலவர் செங்குட்டுவன் அமைச்சராக இருந்த சமயத்தில் அவருடைய குடும்பத்தினரின் சட்டப்பூர்வமான வருமானம் தவிர வருமானத்துக்கு அதிகமாக ரூ.81 லட்சத்து, 42 ஆயிரத்து 977 மதிப்பில் சொத்துகள் வாங்கி குவித்ததாக கடந்த 2003-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் செங்குட்டுவன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Ex DMK minister B M Senguttuvan
இந்த வழக்கில் செங்குட்டுவனுடன் அவரது மகன்களான பன்னீர்செல்வம், சக்திவேல், மகள் மீனாட்சி அவரது கணவரும், முன்னாள் ராணுவ வீரருமான ராஜலிங்கம், புலவர் செங்குட்டுவனின் தம்பி வடமலையின் மகள் வள்ளி ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கு திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி நீதிமன்றத்தில் நடந்தது. இதற்கு முன்னதாக திருச்சியில் ஊழல் தடுப்பு நீதிமன்றம் மற்றும் சென்னையில் எம்எல்ஏக்கள் சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பான நீதிமன்றத்திலும் நடந்து வந்தது. மீண்டும் அந்தந்த மாவட்டங்களுக்கு முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு எம்.பி, எம்எல்ஏக்களுக்கான வழக்குகள் மாற்றப்பட்டது.
இவ்வழக்கில் செங்குட்டுவன் அவரது மகன் பன்னீர்செல்வம், சக்திவேல், மகள் மீனாட்சி, வள்ளி(தம்பி மகள்) மற்றும் மருமகன் ராஜலிங்கம் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர், திமுகவில் இருந்து அதிமுகவுக்கு தாவிய செங்குட்டுவன் சொத்துக்குவிப்பு வழக்கு கொஞ்சம் காலம் கிடத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் திமுகவுக்கு தாவினார். இருந்தபோதும் இந்த வழக்கு தூசுதட்டப்பட்டு சுமார் 200-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று கடந்த மாதம் தீர்ப்பு வழங்குவதாக இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில், செங்குட்டுவன் கொரோனா காலத்தில் 2021-ல் கொரோனா தொற்றால் காலமானார். அவரது மருமகன் ராஜலிங்கம் கடந்த 2017-ல் உடல் நலக்குறைவால் காலமானார். மீதமுள்ள 4 பேர் மீதான வழக்கு விசாரணை திருச்சி முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி பாபு அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி பாபு நேற்று தீர்ப்பு வழங்கினார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு பேருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், 2000 ரூபாயும் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தண்டிக்கப்பட்ட மேற்கண்ட 4 பேரும் உடனடியாக அபராதத்தை கட்டி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமின் தாக்கல் செய்து ஜாமின் பெற்று வெளியே வந்தனர். இந்த வழக்கில் அரசின் சிறப்பு வழக்கறிஞராக ஹேமந்த் வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“