அ.தி.மு.க தலைமை அலுவலகத்தை தாக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே நடந்த சம்பவம் போல் இம்முறையும் நடக்க கூடாது என அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ் தரப்பிலும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட இருப்பதாகாவும் இதற்காக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தர இருப்பதாகவும் தகவல் பரவியது. மேலும் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை தடை செய்யக் கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று (மார்ச் 19) நடைபெறுகிறது.
எந்த வித தொடர்பும் இல்லை
முன்னதாக, அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஓ. பன்னீர் செல்வம் தரப்பு தலைமைக் கழகம் வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே நடந்த சம்பவம் போல் நடந்து விடக்கூடாது என பாதுகாப்பு கேட்டுள்ளோம்.
சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக்கூடாது என்பதால் சட்டப்படி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். மனுவை பெற்றுக்கொண்ட காவல் ஆணையர் போதிய அளவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்கள்.
எங்களுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நாங்கள் காவல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளோம். கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக தலைமை அலுவலகத்தை சூறையாடினார்கள். அதுபோன்ற ஒரு சம்பவம் வரக்கூடாது. எங்களுக்கு நம்பத்தகுந்த தகவல் கிடைத்தது. ஏற்கனவே ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. எனவே மீண்டும் அதுபோன்ற ஒரு நிகழ்வு நடைபெற்று விடக்கூடது என்பதற்காக பாதுகாப்பு கோரியுள்ளோம். அவர்களுக்கும் எம்.ஜி.ஆர் மாளிகைக்கும் எந்த வித தொடர்பும் இல்லை" என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/