தி.மு.க-வின் 19 மாத கால ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் ரூ.2.28 லட்சம் கோடி அதிகரித்துள்ளது என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புதன்கிழமை தி.மு.க அரசை விமர்சித்தார்.
2011-ல் தி.மு.க ஆட்சியில் இருந்து விலகியபோது மாநிலத்தின் கடன் ரூ.1.5 லட்சம் கோடியாக இருந்தது. அ.தி.மு.க ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வந்து பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு பணம் செலவழித்தோம்.
செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “எங்கள் அரசு பதவி விலகும் போது, கடந்த தி.மு.க., ஆட்சியில் வாங்கப்பட்ட ரூ.1.5 லட்சம் கோடி கடனையும் சேர்த்து, ரூ.4.8 லட்சம் கோடி கடன் இருந்தது. ஆனால், தற்போதைய தி.மு.க அரசு மாநிலத்தின் கடனை 505 தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் மற்றும் ஆளுநர் உரையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை நிறைவேற்றாமல், வெறும் 19 மாதங்களில் 2.28 லட்சம் கோடி ரூபாய் கட அதிகரித்துள்ளது.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார், “தி.மு.க கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழகத்தில் பல்வேறு பொருட்களின் விலை உயர்வை கண்டும் காணாமல் இருக்கிறது” என்று குற்றம் சாட்டினார். “முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது மகனை அமைச்சராக்கினார். இதுதான் முடியாட்சி. இதற்கு எதிராக தி.மு.க கூட்டணிக் கட்சிகள் குரல் எழுப்பவில்லை. தமிழ்நாட்டில் தி.மு.க அரசைக் கேள்விக்குள்ளாக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க-தான்” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“