/indian-express-tamil/media/media_files/2025/02/17/TTEOrTl8izAcFr3NsfSt.jpg)
அரசியல் கட்சியில் மூத்த தலைவர், இளைய தலைவர் என யாரும் கிடையாது என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க-வில் அண்மை காலமாக உட்கட்சி பூசல் நிலவி வருவதை போன்ற பிம்பம் உருவாகியுள்ளது. குறிப்பாக, அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிப்ரவரி 9-ஆம் தேதி கோவை அன்னூர் கஞ்சப்பள்ளி பிரிவில் விவசாய சங்கங்கள் சார்பில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்நிகழ்வில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆனால், முன்னாள் அமைச்சரான செங்கோட்டையைன் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. இத்திட்டத்திற்கு அடித்தளமாக இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது படங்கள் மேடையில் இடம்பெறாததால் விழாவில் தான் கலந்து கொள்ளவில்லை என செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இதன் சில நாட்களுக்கு பின்னர், ஈரோடு மாவட்டம், கோபியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நிகழ்ச்சியில் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் படங்கள் இல்லாததால் தான் விவசாயிகள் பாராட்டு விழாவில் நான் கலந்துகொள்ளவில்லை. அ.தி.மு.க ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். என்னை சோதிக்காதீர்கள்; அதுதான் எனது வேண்டுகோள்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "அந்தியூர் சட்டமன்ற தொகுதியில், அ.தி.மு.க தொடர்ந்து வெற்றிவாகை சூடியது. ஆனால், கடந்த முறை சில துரோகிகளால் அங்கு தோல்வி அடையும் நிலை ஏற்பட்டது. ஓ.பி.எஸ் ஆறு மாதங்கள் அமைதியாக இருந்தால், அவரை அ.தி.மு.க-வில் இணைப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று கூறியது அனைத்தும் அவர்கள் இருவருக்குமான கருத்து. இவை தொடர்பாக சம்பந்தப்பட்ட இருவரிடம் தான் ஊடகத்தினர் கேள்வி எழுப்ப வேண்டும்.
மூத்த தலைவர் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் பேசக் கூடாது. குறிப்பாக, அரசியல் கட்சியை பொறுத்த வரை மூத்த தலைவர், இளைய தலைவர் என்ற பேச்சுக்கெல்லாம் இடமில்லை. எல்லோருமே அமைதியாக தங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் நல்லது. அ.தி.மு.க மற்றும் தேர்தல் ஆணையம் தொடர்பான வழக்குகளுக்கு சி.வி சண்முகம் பதில் அளிப்பார். அவர் தான் சட்டக் குழுவின் தலைவர் பதவி வகிக்கிறார்.
மேலும், கூட்டணி தொடர்பான கேள்விகள் அனைத்தையும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும். இதற்கு நான் எப்படி பதில் அளிக்க முடியும்? அ.தி.மு.க-வை பொறுத்த வரை நான் சாதாரண தொண்டன் தான். விவசாயிகளின் பாராட்டு விழாவில் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரது படங்கள் இடம்பெறவில்லையே என்ற எனது ஆதங்கத்தை மட்டுமே நான் வெளிப்படுத்தியிருந்தேன்.
அந்த பாராட்டு விழாவை நான் புறக்கணித்ததாக எல்லோரும் கூறினார்கள். ஆனால், நான் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லையே தவிர அதனை புறக்கணிக்கவில்லை" எனக் கூறினார்.
இது ஒரு புறமிருக்க, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தொகுதி வாரியக பூத் கமிட்டி அமைப்பது, கட்சியின் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது முதலிய பணிகளை மேற்கொள்ள 82 மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்தப் பட்டியலில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பெயர் இடம்பெறவில்லை. இந்த விவகாரமும் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.