சபாநாயகர் அப்பாவுவை இன்று சந்தித்ததற்கான காரணம் குறித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (மார்ச் 14) நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 15) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக நேற்றைய தினம் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்காத செங்கோட்டையன் நேரடியாக சட்டப்பேரவை அலுவலகத்திற்கு சென்றார்.
மேலும், சட்டப்பேரபையில் எடப்பாடி பழனிசாமியை நேருக்கு நேராக சந்திப்பதை அவர் தவிர்த்து வந்தார். முன்னதாக, அத்திக்கடவு பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்ததில் இருந்து இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவதாக அரசியல் வட்டாரம் கூறி வருகிறது. இது அ.தி.மு.க மட்டுமின்றி மற்றக் கட்சியினர் இடையேயும் பேசுபொருளாகியுள்ளது.
இந்த சூழலில் இன்றைய தினம் சபாநாயகர் அப்பாவுவை, செங்கோட்டையன் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் அவர் விளக்கம் அளித்தார். அதன்படி, "சபாநாயகரை சட்டமன்ற உறுப்பினர் சந்திப்பது வழக்கமான நிகழ்வு தான். இன்று கூட அ.தி.மு.க-வைச் சேர்ந்த 6,7 சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்தோம். என்னுடைய தொகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அது தொடர்பாக தான் சபாநாயகரை சந்தித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தேன். அப்போது சுற்றுச்சூழல் அமைச்சரும் அங்கு வருகை தந்தார். எனவே, பிரச்சனை தொடர்பான கடிதத்தை அமைச்சரிடமும் கொடுத்தேன். இது மட்டுமே நடந்தது" என செங்கோட்டையன் தெரிவித்தார்.