ஈரோட்டில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாக தகவல் பரவிய நிலையில், அதற்கான விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.
அ.தி.மு.க-வில் அண்மை காலமாக உட்கட்சி பூசல் நிலவி வருவதை போன்ற ஒரு பிம்பம் இருக்கிறது. குறிப்பாக, அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றியது தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் இருந்து நிலைமை சற்று சீரற்ற நிலையில் இருந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பிப்ரவரி 9-ஆம் தேதி கோவை அன்னூர் கஞ்சப்பள்ளி பிரிவில் விவசாய சங்கங்கள் சார்பில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்நிகழ்வில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆனால், முன்னாள் அமைச்சரான செங்கோட்டையைன் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. இத்திட்டத்திற்கு அடித்தளமாக இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது படங்கள் மேடையில் இடம்பெறாததால் விழாவில் கலந்து கொள்ளவில்லை என செங்கோட்டையன் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார். இச்சம்பவம் அரசியல் களத்தில் பேசுபொருளானது.
ஆனால், கட்சி சார்பாக நடத்தப்பட்ட விழாவாக இல்லாததால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது படங்கள் இடம்பெறவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த சூழலில், ஈரோட்டில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டில் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்படுவதாக தகவல் பரவியது. குறிப்பாக, அவரது வீட்டில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கூடியிருந்ததால், இது போன்ற தகவல் பரவியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது வீட்டில் ஆலோசனை கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, "என்னை சந்திக்க தினமும் 100 அல்லது 200 நபர்கள் வருவது வாடிக்கை தான். அதற்காக, ஆலோசனை கூட்டம் நடத்துவதாக கூறுவதா? தனியாக எந்த ஆலோசனை கூட்டமும் நடத்தப்படவில்லை" என அவர் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமின்றி, அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. இது போன்ற நிகழ்வுகளால் அ.தி.மு.க வட்டாரத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதாக கூறப்படுகிறது.