சென்னையில், நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தான் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தொடங்கி அ.தி.மு.க-வில் நீண்ட காலமாக இருந்து வருபவர் செங்கோட்டையன். இதனால் அ.தி.மு.க-வில் தொண்டர்கள் இடையே தனி செல்வாக்கோடு செங்கோட்டையன் வலம் வருகிறார். இந்த சூழலில் தற்போது அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமியின் மீது அவர் அதிருப்தியாக இருப்பதை போன்ற பிம்பம் உருவாகி இருக்கிறது.
குறிப்பாக, செங்கோட்டையனின் சமீப கால நடவடிக்கைகள் தான் இது போன்ற ஒரு பிம்பத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்வு ஒன்றில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அதில் அவர் கூறிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன.
இந்நிகழ்வில், "நான் தலைவர் அல்ல; தொண்டனாக கருத்தை கூறி வருகிறேன். எந்தப் பாதை சரியாக இருக்கிறதோ, அந்தப் பாதையில் நான் சென்று கொண்டிருக்கிறேன். என் லட்சியம் உயர்வானது. எனது பாதை தெளிவானது. இதேபோல், என் முடிவு இறுதியானது.
சில வேடிக்கை மனிதர்களை போல் நான் வீழ்ந்து விட மாட்டேன்" என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக இன்றைய தினம் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கலந்து கொண்ட அவர், எடப்பாடி பழனிசாமியை நேரடியாக சந்திப்பதை தவிர்த்து வந்தார். மேலும், சபாநாயகர் அப்பாவுவையும், செங்கோட்டையன் நேரில் சந்தித்தார். எனினும், தொகுதி தொடர்பான பிரச்சனைகள் குறித்து மட்டுமே பேசியதாக அவர் விளக்கம் அளித்தார்.
அண்மையில், அத்திக்கடவு திட்டம் தொடர்பாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் கட்சியின் முக்கிய நிர்காகிகள் கலந்து கொண்ட நிலையில், அந்த நிகழ்வில் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை.
அப்போது, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது படங்கள் இடம்பெறவில்லை எனக் கூறி தனது அதிருப்தியை தெரிவித்த செங்கோட்டையன், அதனால் தான் விழாவில் கலந்து கொள்ளவில்லை எனக் கூறினார். இச்சம்பவம் முதல் எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் இடையே பனிப்போர் நிலவி வருவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.