ஆளும் அதிமுகவில் மேலும் ஒரு அணி உருவாகியுள்ளது. ஆட்சியை மட்டும் கவனிக்கிறார்கள். கட்சியை கவனிப்பதில்லை என்ற கோஷத்துடன் அவர்கள் களம் காணவுள்ளனர்.
ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் அதிமுக சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஓரணியாகவும் பிரிந்து கிடக்கிறது. சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி வகித்து வருகிறார். சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் சிறையில் இருந்த படியே ஆட்சியை நடத்தி வருகிறார்கள்.
ஆட்சியை தக்க வைப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி படாத பாடு பட்டு வருகிறார். 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சியில் இருக்கும் அவருக்கு நிறைய பிரச்னைகள். முன்னாள் அமைச்சர்களான தோப்பு வெங்கடாசலம், செந்தில்பாலாஜி, பழனியப்பன் ஆகியோர் தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 9 பேருடன் தனியாக கூட்டம் போட்டு பேசினார்கள். பின்னர் நேற்று 22.5.17 அன்று முதல்வரை சந்தித்துப் பேசினார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்று அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் இல்லை. ஆனால், முன்னாள் அமைச்சர்கள் 3 பேருக்கும் மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும். இல்லை என்றால் 9 பேரும் மாற்று அணிக்குப் போகப்போவதாக முதல்வரிடம் சொன்னதாக தெரிகிறது.
இந்நிலையில், அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தலைமையில் இன்னொரு அணி உருவாகியுள்ளது. அவர்கள் யாரும் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை. அனைவரும் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள். நேற்று (22.05.17) அவர்கள் ரகசிய இடத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்கள்.
இது குறித்து முன்னாள் அமைச்சர் வைகை செல்வனிடம் கேட்ட போது, ‘சந்திப்பு நடந்தது உண்மைதான். கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். யார் யார் என்பதை இப்போது சொல்ல முடியாது. இந்த கூட்டத்தில் அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது போதாது. கட்சியின் நிறுவனரான எம்.ஜி.ஆருக்கு கட்சி சார்பிலும் நூற்றாண்டு விழா நடத்தப்பட வேண்டும். ஆனால் யாரும் கட்சியை கண்டு கொள்வதே இல்லை. ஆட்சியைப் பற்றியே கவலைப்படுகிறார்கள். கட்சியில்லாமல் ஆட்சி எப்படி வரும் என்பதை அவர்கள் யோசிக்கவில்லை. என்ஜின் இல்லாத ரெயில் பெட்டி போல ஆட்சி நடக்கிறது. கட்சியோ கவனிப்பாரற்று கிடக்கிறது. கட்சியை எப்படி வழி நடத்துவது என்பது குறித்து கூட்டத்தில் விவாதித்தோம். விரைவில் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவோம்’ என்றார், வைகை செல்வன்.
அதிமுக சசிகலா அணி ஏற்கனவே இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இப்போது மூன்றாவதாக ஒரு அணி உருவாகியுள்ளது. இவர்களால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்றாலும், கட்சி பின்னடைவை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.