/indian-express-tamil/media/media_files/2025/05/24/YNLuZf6t212SszVVw7JM.jpg)
கோவை மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்தான ஆலோசனைக் கூட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கோவை மாவட்ட அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட, மாநகர் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி. வேலுமணி, கோவை மாநகராட்சி வரி உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், அடிப்படை திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அவ்வாறு செய்யப்படாவிட்டால், மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தி.மு.க அரசு தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு திட்டங்களையும் தரவில்லை என்றும், அனைத்து தரப்பு மக்களும் சிரமத்தில் உள்ளார்கள் என்றும் எஸ்.பி. வேலுமணி குற்றம் சாட்டினார். கைத்தறி மற்றும் விசைத்தறி போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்தால் தான் இதற்கெல்லாம் மாற்றம் கிடைக்கும் என பொதுமக்கள் பலரும் கூறுவதாகவும், தி.மு.க-வை மக்கள் புறக்கணிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாகக் கெட்டுவிட்டது எனத் தெரிவித்த எஸ்.பி. வேலுமணி, முதியவர்களைக் கொலை செய்து நகைகள் கொள்ளையடிக்கப்படுவதாகக் கூறினார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது கோவையில் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் முதலிடம் பெற்றதாகவும், ஆனால் தற்போது சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா முதலமைச்சர்களாக இருந்தபோது மத்திய அரசிடம் இருந்து அதிக நிதிகள் பெறப்பட்டு வந்தது என்றும், மெட்ரோ ரயில் வர ஜெயலலிதா தான் காரணம் என்றும் எஸ்.பி. வேலுமணி கூறினார்.
பருவமழை தொடங்கி விட்டதாகவும், சாலைகள் குண்டும் குழியுமாய் உள்ளதால் மக்கள் அவதிப்படப் போவதாகவும் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். எந்த நீர்நிலைகளும் தூர்வாரப்படவில்லை என்றும், அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தனக்கு வந்த கொலை மிரட்டல் தொடர்பாக மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை செய்திகளில் விளம்பரப்படுத்தியது வருத்தம் அளிப்பதாகவும் அவர் கூறினார். யாருக்கு இது போன்ற மிரட்டல் வந்தாலும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.