வேல்முருகனுக்கு போலீஸ் பாதுகாப்பை தமிழக அரசு வாபஸ் பெற்றிருக்கிறது. ‘பங்காளிச் சண்டையில் என் உயிர் பலியாக அரசு விரும்புகிறதா?’ என அவர் கேள்வி விடுத்தார்.
வேல்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். ஈழத் தமிழர் ஆதரவு மற்றும் காவிரி உரிமைப் போராட்டங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார் வேல்முருகன்.
வேல்முருகன், பாட்டாளி மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது ஆறுகளில் மணல் கொள்ளைக்கு எதிராக சட்டமன்றத்திலும், பொது வெளியிலும் குரல் கொடுத்து வந்தார். மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்த ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்ததில், வேல்முருகனின் கோரிக்கைக்கும் பங்கு உண்டு. எனவே மணல் மாஃபியாவின் மிரட்டல் அவருக்கு இருந்தது.
எனவே அப்போது முதல் அவருக்கு போலீஸ் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு வழங்கியது. பிறகு பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து வேல்முருகன் விலகியதைத் தொடர்ந்து பல இடங்களில் பாமக.வினருக்கும், இவரது தமிழக வாழ்வுரிமைக் கட்சியினருக்கும் மோதல்கள் நடந்தன. எனவே அந்தப் பாதுகாப்பு தொடர்ந்தது.
18 ஆண்டுகளாக தொடர்ந்த அந்தப் பாதுகாப்பை சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்றிருக்கிறது. சென்னையில் இன்று (ஏப்ரல் 9) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தத் தகவலை வேல்முருகன் தெரிவித்தார். ‘பாதுகாப்பை வாபஸ் பெறுவது குறித்து என்னிடம் ஒரு தகவல்கூட கூறவில்லை’ என்றும் வேல்முருகன் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு வாபஸ் பற்றி வேல்முருகன் மேலும் கூறுகையில், ‘மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தீவிரமான போராட்டங்களை நான் நடத்தி வருவதால், முதுகெலும்பில்லாத எடப்பாடி அரசு தனது பாதுகாப்பை வாபஸ் பெற்றிருக்கிறது. எங்களுக்குள் இருக்கும் பங்காளிச் சண்டையில் வேல்முருகன் சாகட்டும் என நினைத்து வாபஸ் பெற்றார்களா? எனத் தெரியவில்லை. ஆனாலும் என் உயிரைப் பற்றி நான் கவலைப்படவில்லை. மக்களுக்காகவும், இந்த மண்ணுக்காகவும் என் போராட்டம் தொடரும்’ என்றார் வேல்முருகன்.
ஏப்ரல் 11-ம் தேதி பாமக சார்பில் நடைபெறும் முழு அடைப்புக்கு ஆதரவு கொடுப்பீர்களா? என வேல்முருகனிடம் கேட்டபோது, ‘உளப்பூர்வமாக அதற்கு ஆதரவு கொடுக்கிறோம். மருத்துவர்கள் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் கேட்டுக்கொண்டால், எங்கள் கட்சித் தொண்டர்கள் அவர்களுடன் கைகோர்த்து நின்று காவிரிப் பிரச்னையில் போராடத் தயார்’ என்றார்.