அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபால் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் திடீரென திமுகவை அரசை புகழ்ந்ததால் அதிமுக தலைமை ஆடிப்போய் இருக்கிறது.
பெரியாரின் எழுத்துகள் மற்றும் பேச்சுக்களை 21 இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் மொழி பெயர்த்தல் மற்றும் மாணவிகளின் உயர்கல்விக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் திமுக அரசின் முடிவைப் பாராட்டி, செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் முன்னாள் சபாநாயகர் தனபால் அதிமுகவினரை அசர வைத்துள்ளார்.
முன்னாள் சபாநாயகர் தனபால், “பெரியாரையும் அவரது சிந்தனைகளையும் உலகம் முழுவதும் கொண்டு செல்லும் மாநில அரசின் முயற்சியைப் பாராட்டுகிறேன்” என்று கூறினார். முன்னாள் சபாநாயகர் தனபால் திமுக அரசின் திட்டத்தைப் பாராட்டியதையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனபாலுக்கு நன்றி கூறினார். மேலும், தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் திமுக நிறைவேற்றும் என்று உறுதியளித்தார். அதே நேரத்தில், தனபால், அவர் எதிர்பார்த்தபடி, மாநில பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததால் சற்று ஏமாற்றம் அடைந்ததாகக் கூறினார். பின்னர், பள்ளியின் உள்கட்டமைப்பை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு செய்ததற்காக அவர் அனைவரும் பாராட்டுகிறார்கள் என்று கூறிய தனபால், 1,652 கோடி ரூபாய் மதிப்பில் அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறு மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் தனபால் சபாநாயகராக தொடர்ந்து இருந்தார். கட்சியில் ஓ.பி.எஸ், சசிகலா, இ.பி.எஸ் இடையே பூசல்கள் எழுந்தபோது எந்த கருத்துகளையும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற சட்டப் பேரவைக் கூட்டத்தில், முன்னாள் சபாநாயகர் தனபால் திடீரென திமுக அரசை புகழ்ந்து பேச அதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி கூற அதிமுக ஆடிப்போயுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"