தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடந்த செமஸ்டர் தேர்வின் முடிவில் அதிக மாணவர்கள் தோல்வி அடைந்ததையடுத்து கோபமடைந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 9 மாணவர்களை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது என தி நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது.
முறையற்ற விடைத் தாள் திருத்தத்தால் பல மாணவர்கள் வெவ்வேறு பாடங்களில் தோல்வியடைந்தாக மாணவர்கள் தெரிவித்தனர். வினாத் தாள் குறிப்பு இல்லை, அதிக மறுமதிப்பீட்டுக் கட்டணம், வினாத் தாள் குளறுபடி, தாமதமான முடிவுகள் போன்ற குற்றச்சாட்டுகளை பல்கலை மீது கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 7 ஆம் தேதி மதியம் 2 மணியளவில் போராட்டம் தொடங்கி மறுநாள் அதிகாலை 3 மணிக்கு முடிந்ததாக கூறினர்.
மாணவர்கள் கூறுகையில்,"ஆரம்பத்தில், நிர்வாகம் நாங்கள் கூறுவதை கேட்க மறுத்தது, டீன் பிரச்சினையை தீர்க்க தனக்கு அதிகாரம் இல்லை என்று கூறினார், எனவே துணைவேந்தர் (V-C) மற்றும் தேர்வு நடத்துபவர்கள் பதிலளிக்குமாறு கோரினோம். ஆனால் அவர்கள் அனைவரும் எங்களை புறக்கணித்துவிட்டனர்,'' என்றனர்.
பெயர் குறிப்பிட விரும்பாத மாணவர் ஒருவர், மறுமதிப்பீட்டிற்கு தாள் ஒன்றுக்கு 400 ரூபாயும், விடைத்தாள்களின் ஜெராக்ஸ் பிரதிக்கு 500 ரூபாயும் பல்கலைக்கழகம் வசூலிக்கிறது என்று கூறினார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் விடைத்தாளுக்கு விண்ணப்பித்தால் கூட இவ்வளவு தொகை ஆகாது என மாணவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாணவர்கள் துணை வேந்தர், டீன், தேர்வுத் துறைக்கு கடிதம் எழுதினர். அதில், இந்த விவகாரங்களை தெரியப்படுத்தினர்.
"இவ்வாறு இருப்பதால் யாரும் முழு மதிப்பெண்கள் பெற முடியாது சூழல் உள்ளது. இது மாணவர்களின் ஒட்டுமொத்த மதிப்பெண்களைப் பாதிக்கிறது. 10,12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் கூட இங்கு 55 மதிப்பெண்களுக்கு மேல் பெற முடியாத நிலை உள்ளது. ஒரு மாணவர் இன்டர்னல்ஸில் முழு மதிப்பெண்கள் பெற்றால் கூட மொத்தம் மதிப்பெண் 85% க்கு மேல் இல்லை. இதுவே தனியார் சட்டக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து 85-95% மதிப்பெண்களைப் பெற்று முதுநிலை சேர்க்கை மற்றும் வேலை வாய்ப்புகளில் ஒரு நன்மையைப் பெற்றிருப்பதையும் மாணவர்கள் சுட்டிக்காட்டினர்.
தொடர்ந்து இதற்கு எல்லாம் நிர்வாகம் உரிய பதில் அளிக்க வேண்டும், மறுமதிப்பீட்டுக் கட்டணத்தை குறைக்க வேண்டும் எனக் கூறினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“