கனமழை காரணமாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுகுறைந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதனால் நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதேபோல நெல்லையிலும் பரவலாக மழை பெய்ததால் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கனமழை காரணமாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழம் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் தெரிவித்துள்ளார். ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வு தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அதற்காக அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்வு எழுதுவார்கள்.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தேர்வு செய்யப்படும் 100 மாணவர்களுக்கு, 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையில் 4 ஆண்டுகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும். இந்நிலையில் நாளை (டிச.14) நடைபெற இருந்த நடப்பாண்டு, ஊரகத் திறனாய்வு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் நலன் கருதி, நாளை நடைபெற இருந்த ஊரகத் திறனாய்வு தேர்வு தள்ளி வைக்கப்படுவதாகவும் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“