சட்டப்பேரவைக்கு கருணாநிதி வராமல் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானத்தை ஸ்டாலின் கொண்டு வந்தார். அது ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை ஏன் ஸ்டாலின் கொண்டு வந்தார் என்பதற்கான விபரமும் தெரிய வந்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல் நலமில்லாமல் அவதிப்பட்டு வருகிறார். காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் நலம் தேறி அவர் வீட்டுக்கு வந்த போதிலும், மிக முக்கிய நபர்களை தவிர வேறு யாரும் அவரைப் பார்க்க அனுமதி கொடுப்பதில்லை.
ஜூன் 3ம் தேதி நடந்த அவரது பிறந்த நாள் மற்றும் கருணாநிதி சட்டமன்றத்துக்குள் நுழைந்த
வைரவிழா ஆண்டு பொதுக்கூட்டத்துக்கும் அவர் வரவில்லை. டெல்லியில் இருந்து வந்த முக்கிய தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதே போல ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் மட்டுமே அவரை சமீபத்தில் சந்தித்துள்ளனர். அதே நேரத்தி ஜனாதிபதி தேர்தலில் அவர் ஓட்டுப் போட வரவில்லை.
கூட்டம் அதிகம் இருக்கும் இடத்துக்கு அவர் சென்றால், நோய் தொற்று வர வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர்கள் சொன்னதாலேயே, அவர் வீட்டிலேயே ஒய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில் சட்டப்பேரவைக்கு கருணாந்தி வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக கருணாநிதி பதவி வகித்து வருகிறார். சட்டமன்ற உறுப்பினர், ஆறு மாதத்துக்கு ஒரு முறை பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் வருகை பதிவேட்டிலாவது கையெழுத்து போட்டிருக்க வேண்டும். ஓராண்டுகள் வராமல் போனால், பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து பதவியைப் பறிக்க முடியும். சிறையிலோ அல்லது உடல் நல குறைவோ இருந்தால் அது குறித்து சபாநாயகருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்த வேண்டும். அவர் பேரவையில் தீமானம் கொண்டு வருவார்.
கருணாநிதியைப் பொறுத்த வரையில் அவர் வயது மூப்புக் காரணமாக அடிக்கடி ஞாபக சக்தியை இழந்துவிடுகிறார். மேலும் அவர் தொண்டையில் போடப்பட்ட ட்யூப் இன்னமும் அகற்றப்படவில்லை. எனவே அவர் இனி பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்பதால், பேரவை தலைவர் அனுமதியுடன் தீர்மானமாக கொண்டு வந்து விலக்கு கோரினார், ஸ்டாலின்.
சட்டப்பேரவைக்கு கருணாநிதி வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.