VK sasikala Quitting Politics: அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்தார். தமிழகத்தில் அம்மா ஆட்சி அமைந்திட இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
நம்முடைய பொது எதிரி தீயசக்தி என ஜெயலலிதா அடையாளம் காட்டிய தி.மு.கவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து விவேகமாக இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட தொண்டர்கள் பாடுபட வேண்டும்.
என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய உண்மைத் தொண்டர்களுக்கும் நல்ல உள்ளங்களுக்கும் என் உணர்வுபூர்வமான நன்றிகள். ஜெயலலிதா இருந்தபோது எப்படி அவரது எண்ணத்தைச் செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன்.
நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதாரத்திற்காகவோ ஆசைப்பட்டத்தில்லை. ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் என்றும் நன்றியுடன் இருப்பேன்.
நான் அரசியலை விட்டு ஒதுங்கி, அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியிடமும், எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் சசிகலா தெரிவித்தார்.