A R Rahman : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது செயலாளர் செந்தில் வேலவன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரில், “2018-ல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான மாநாட்டில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இசை நிகழ்ச்சிக்காக ஏ.ஆர். ரகுமானுக்கு ரூ.29.50 லட்சம் முன் பணம் வழங்கப்பட்டது.
இசை நிகழ்ச்சி நடைபெறாத நிலையில் அந்த தொகையை திரும்ப தருமாறு ஏஆர் ரகுமானுக்கு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
ஆனால், ஏ.ஆர். ரகுமான் முன்பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பி தரவில்லை” எனக் கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து, “ஏ.ஆர்.ரகுமான் அவரது செயலாளர் செந்தில் வேலவன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் மேலாளரும், தி குரூப் நிறுவனத்தின் உரிமையாளருமான செந்தில் வேலவன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில், “அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் அளித்த புகாருக்கும், ஏ.ஆர். ரஹ்மானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்தச் சங்கத்திடம் இருந்து இசை நிகழ்சசி நடத்த ரூ.29.50 லட்சம் வாங்கப்பட்டது.
இதற்கிடையில் நிகழ்ச்சி நடத்துவதற்கான தொகை அதிகரிப்பு காரணமாக அவர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்தனர். ரத்து செய்தாலும் முன்பணத் தொகை திருப்பி வழங்கப்பட மாட்டாது என்பது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அனைத்து இசை நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“