மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே பட்டாசு ஆலையில் நாட்டு வெடி தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே தில்லையாடியில், மோகன் என்பவர் அரசு அனுமதி பெற்று நாட்டு வெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை நடத்தி வந்தார்.
இந்நிலையில், தீபாவளிக்காக பட்டாசுகள் தயாரிக்கும் வேலை நடந்துவந்துள்ளது. அப்போது இந்த பட்டாசு ஆலை குடோனில் நாட்டு வெடி தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கே பணியில் ஈடுபட்டிருந்த 4 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெடி விபத்தின்போது சுமார் 2 கி.மீ தொலைவு வெடி சத்தம் கேட்டதால், அருகே இருந்தவர்கள் வந்து பார்த்தபோது, பட்டாசு குடோனில் வேலை செய்தவர்களின் உடல்கள் சிதறி இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த வெடி விபத்து சம்பவம் நடந்த இடத்தில், நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக வந்த தகவலைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“