திருவள்ளூர் - ஏகாட்டூர் இடையே இன்று (ஜூலை 13) காலை டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் 4 பெட்டிகள் எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்தன. இதனால், அப்பகுதியில் மீட்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
இதையொட்டி, விபத்து காரணமாக விரைவு ரயில்கள், புறநகர் ரயில்கள் என 15 ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னையில் இருந்து கோவை, பெங்களூர் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை - மைசூர் வந்தே பாரத் (20607), சென்னை மைசூர் சகாப்தி (12007), சென்னை - கோவை இன்டர்சிட்டி (12675), கோவை சகாப்தி (12243) ஆகிய விரைவு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், சென்னை - மைசூர் (20607) சென்னை - மைசூர் (12007) சென்னை - கோயம்புத்தூர் (12675) சென்னை - கோயம்புத்தூர் (12243) சென்னை - திருப்பதி (16057) சென்னை - பெங்களூர் (22625) சென்னை - பெங்களூர் (12639) சென்னை - நிஜாமாபாத் (16003) உள்ளிட்ட ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில், ரயில் தீ விபத்து நடந்த இடத்திற்கு பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்தனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், 60 பேர் கொண்ட இரண்டு குழுவினர் மீட்பு பணிகளை மேற்கொள்கின்றனர். ஆய்வாளர் கோபிநாத் தலைமையிலான மீட்பு படையினர் சென்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தின் விளைவால் சுமார் 200 மீட்டர் அளவிற்கு தண்டவாளம் பாதிப்படைந்துள்ளது. மேலும், ரயில்வே ட்ராக்கில் உள்ள அனைத்து மின் கம்பங்களிலும் மின்சார வயர்கள் சேதமடைந்தன. இதனை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது மட்டுமின்றி, எரிபொருள் ஏற்றி வந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக, திருவள்ளூரில் காற்றின் தரக் குறியீடு பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மிதமான அளவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாகவும், காற்றில் நுண்துகள் பாதிப்பு அதிகரித்திருப்பதாகவும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி சீனிவாச பெருமாள் ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு அருகில் பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். பயணிகளின் நலனுக்காக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், 044 25354151, 044 24354995 ஆகிய எண்களை மக்கள் தொடர்பு கொள்ளலாம்.