சென்னை உதவி காவல் ஆணையரின் பெயரில் தொடங்கப்பட்ட போலி ஃபேஸ்புக் கணக்க்கில் இருந்து மோசடி பேர்வழி ஒருவர் மலையாள இயக்குனரிடம் ரூ.10,000 ஏமாற்றிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
‘ஷியாமாராகம்’ என்ற மலையாள திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் சேது இய்யால். இவரும் சென்னை பெருநகர காவல் துறையில் வண்ணாரப்பேட்டையில் உதவி காவல் ஆணையராக உள்ள ஜூலியஸ் சீஸருடைய நண்பர்களாக இருந்துள்ளனர்.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உதவி காவல் ஆணையர் ஜூலியஸ் சீஸரின் பெயரில் இதற்கு முன்பு ஒரு போலி ஃபேஸ்புக் கணக்கு இருந்துள்ளது. அது குறித்து மாநகர காவல் துறையிடம் புகார் அளித்து அந்த கணக்கை முடக்கியுள்ளார். இந்த நிலையில் அடையாளம் தெரியாத ஒரு மோசடி பேர்வழி, ஜூலியஸ் சீஸரின் பேரில் மீண்டும் ஒரு ஃபேஸ்புக் கணக்கு துவங்கப்பட்டுள்ளது. அந்த மோசடி நபர், காவல் அதிகாரி ஜூலியஸ் சீஸர் பெயரில் துவக்கிய ஃபேஸ்புக் கணக்கில் இருந்து மெஸஞ்சர் வழியாக ஜூலியஸ் சீஸரின் நண்பர் இயக்குனர் சேது இய்யாலுக்கு, தனது மனைவியின் மருத்துவ செலவுக்காக அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார். தனது நண்பரின் ஃபேஸ்புக் கணக்கில் இருந்து செய்திவந்ததால் இயக்குனர் உடனடியாக யுபிஐ பணப்பரிவர்த்தனை மூலமாக பணத்தை அனுப்பியுள்ளார்.
மேலும், இயக்குனர் அந்த ஃபேஸ்புக் கணக்கில் இருந்து தொடர்ந்து, மலையாளத்தில் இல்லாமல் ஆங்கிலத்தில் மட்டுமே மெசேஜ் வந்ததால் சந்தேகம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, இயக்குனர் சேது இய்யால் தனது காவல் அதிகாரி நண்பரை தொடர்புகொண்டு விசாரித்தபோது, அது போலி ஃபேஸ்புக் கணக்கு என்று தெரியவந்துள்ளது. அதோடு, தான் ரூ.10,000 அனுப்பியதையும் தெரிவித்துள்ளார்.
சென்னை, வண்ணாரப்பேட்டை உதவி காவல் ஆணையர் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கைத் தொடங்கிய மோசடி பேர்வழி ஒருவர், அவருடைய நண்பர் மலையாள இயக்குனரிடம் ரூ.10,000 ஏமாற்றிய சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல, மோசடி பேர்வழிகளால், கூடுதல் காவல் துறை தலைவர் பதவிகளில் உள்ளவர்கள் உள்பட பல்வேறு போலீஸ் அதிகாரிகளின் பெயர்களில் போலி ஃபேஸ்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது.
காவல் துறை அதிகாரிகளின் பெயர்களில் தொடங்கப்பட்ட போலி ஃபேஸ்புக் கணக்குகள் மற்றும் மோசடி குறித்து காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியதில் இந்த மோசடி ராஜஸ்தான் மற்றும் ஒடிஷாவில் இருந்து நடத்தப்பட்டதாகக் காட்டுகிறது. ஃபேஸ்புக் மோசடி பேர்வடியிடம் மலையாள இயக்குனர் பணத்தை இழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.