Fact Check | kanniyakumari: “பொன்னாரின் இமாலய சாதனை. குமரியில் புதிதாக அருவி திறப்பு. #marthandambridge #marthandam மேம்பாலம். உலக மகா ஊழலுக்கு எடுத்துக்காட்டு இந்த சங்கி” எனக் குறிப்பிடப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகியது. இந்த வீடியோ தொடர்பான உண்மைச் சரிபார்ப்பு (Newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
அந்த வீடியோவில், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருக்கும் மேம்பாலத்தில் இருந்து அருவிபோல் தண்ணீர் கொட்டுவதை, 'குமரியில் புதிதாக திறக்கப்பட்ட அருவி' என்று குறிப்பிட்டு வீடியோ பகிரப்பட்டது. இந்நிலையில், சமூக ஊடக பக்கங்களில் அதிகம் பகிரப்பட்ட இந்த வீடியோவில் இடம் பெற்று இருக்கும் உண்மைத் தன்மையை நியூஸ் செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்யப்பட்டது.
'குமரியில் புதிதாக திறக்கப்பட்ட அருவி' எனக் குறிப்பிட்டு பரப்பப்படும் வீடியோவை தனித்தனி கீ ஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் (image reverse search) முறைக்கு உட்படுத்தி கூகுள் தளத்தில் அந்த வீடியோ குறித்து தேடப்பட்டது. இந்தத் தேடலில் அந்த சம்பவம் கோயம்புத்தூரில் நடந்ததாக கூறி இதே போன்ற வீடியோ பரவி வருவதை கண்டறிந்துள்ளனர்.
இந்த சம்பவம் உண்மையில் எங்கு நடந்தது? என்று அவர்கள் ஆராய்ந்து பார்க்கையில், அந்த சம்பவம் கோயம்புத்தூரில் உள்ள ராமநாதபுரம்-சுங்கம் மேம்பாலத்தில் நடந்ததாக 'சமயம் தமிழ்' நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்ததை கண்டறிந்துள்ளனர். இது தொடர்பான தொடர் தேடலில் பாலிமர் நியூஸ், கலாட்டா வாய்ஸ் உள்ளிட்ட ஊடகங்களும் கோயம்புத்தூரில் நடந்ததாகவே செய்தி வெளியிட்டிருந்ததை கண்டறிந்துள்ளனர்.
முடிவில், 'குமரியில் புதிதாக திறக்கப்பட்ட அருவி' என்று பரப்பப்படும் வீடியோ தொடர்பான தகவல் தவறானது என்றும், உண்மையில் அந்த வீடியோவில் காணப்படும் சம்பவம் கோயம்புத்தூரில் நடந்தது என்றும், கிடைக்கப் பெற்ற ஆதாரங்கள் வாயிலாக நிரூபித்துள்ளனர். எனவே, இந்தத் தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்றும் நியூஸ் செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் செக்கர் தமிழ் இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“