Advertisment

அண்ணாமலையுடன் நிற்கும் விஜய்: வைரலாகும் புகைப்படம்; உண்மை என்ன?

வைரலாகும் அந்தப் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்றும், தமிழக வெற்றி கழகம் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கப்போவதாக எந்த ஒரு தகவலும் இல்லை என்றும் நியூஸ் மீட்டர் இணையதளம் கண்டறிந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Fact Check tamilaga vettri kazhagam vijay with BJP leader annamalai truth behind viral photos Tamil News

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையுடன் நிற்கும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

பா.ஜ.க தலைவர் அண்ணாமலையுடன் த.வெ.க தலைவர் விஜய் நிற்பதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வரும் நிலையில், அதன் உண்மைத் தன்மையை நியூஸ்மீட்டர் இணைய தளம் சார்பார்த்துள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ்மீட்டர் (Newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

Advertisment

தமிழ் திரையுலகில் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். அவர் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அக்கட்சியின் கொள்கையை விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டில் விளக்கினார். இந்த மாநாட்டில் பேசிய விஜய், தனது அரசியல் எதிரிகள், கொள்ளை எதிரிகள் யார் என்பது குறித்து கூறியிருந்தார். அத்துடன், ‘எங்களுக்கு எந்த சாயமும் பூசாதீர்கள்’ எனக் கூறிவிட்டு தி.மு.க, பா.ஜ.க ஆகிய கட்சிகளை நேரடியாகவே விமர்சித்தார். 

இந்நிலையில், த.வெ.க தலைவர் விஜய் குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. “நடிகர் விஜயை ஆட்டுவிக்கும் பா.ஜ.க. மொத்தமாக பா.ஜ.க ஏஜெண்டாக மாறிய விஜய். அ.தி.மு.க, பா.ம.க, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர், தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளுடன் கை கோர்த்து தி.மு.க-வை எதிர்க்க பா.ஜ.க போட்ட ரகசிய திட்டம் அம்பலமானது. 

திராவிடத்தை ஒழிக்க கள்ளத்தனமாக அண்ணாமலையுடன் லண்டனில் சீக்ரெட் மீட்டிங் போட்ட நடிகர் விஜய். விஜயை விமர்சிக்கவோ கருத்து தெரிவிக்கவோ கூடாது என்று கண்டிப்புடன் ஆர்டர் போட்ட அண்ணாமலை.” என்று பல்வேறு தகவல்களை குறிப்பிட்டு மை இந்தியா (My India 24x7) என்ற யூடியூப் சேனல் வெளியிட்ட காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையுடன் நிற்கும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

உண்மை சரிபார்ப்பு 

இந்நிலையில், இந்தப் புகைப்படத்தின் உண்மைத் தன்மையை நியூஸ் மீட்டர் இணையதளம் ஆய்வு செய்துள்ளது. அந்த ஆய்வில் வைரலாகும் அந்தப் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்றும், தமிழக வெற்றி கழகம் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கப்போவதாக எந்த ஒரு தகவலும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

முதலில் வைரலாகும் தகவல் குறித்த உண்மை தன்மையைக் கண்டறிய கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்க்கப்பட்ட நிலையில், தமிழக வெற்றி கழகம் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கப்போவதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைவர் விஜயின் ஒப்புதலுடன் அறிக்கை ஒன்றை நேற்று திங்கள்கிழமை (நவம்பர் 18) எக்ஸ் தளத்தில் (Archive) வெளியிட்டு இருந்தார். அதில், “அ.தி.மு.க-வுடன் கூட்டணி என்று வெளியான செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது” என்று குறிப்பிட்டு இருந்தார். 

இதனைத்தொடர்ந்து, பா.ஜ.க-வுடன் கூட்டணி என்று செய்திகள் ஏதும் வெளியாகி இருக்கிறதா என்கிற கோணத்தில் தேடப்பட்டுள்ளது. அதுபோன்று எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும், நடிகர் விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் அண்ணாமலையுடன் நிற்கும் புகைப்படத்தின் உண்மை தன்மையை கண்டறிய அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்துள்ளார்கள். 

அப்போது, தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நடிகர் விஜயை பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேரில் சந்தித்து பேசியதாக கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா, ஜீ நியூஸ் (Times of India, Zee News) உள்ளிட்ட ஊடகங்கள் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் மூலம் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு இருப்பதை கண்டறிந்துள்ளனர். 

மேலும் அவர்களது தேடலின் முடிவில், தமிழக வெற்றி கழகம் பா.ஜ.க உடன் கூட்டணி வைக்கப்போவதாக வைரலாகும் தகவல் தவறானது என்றும், லண்டனில் அண்ணாமலையை ரகசியமாக சந்தித்த விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் எனக் குறிப்பிட்டு வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ்மீட்டர் (Newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

https://newsmeter.in/fact-check-tamil/actor-vijay-with-tamilnadu-bjp-president-annamalai-739192

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Actor Vijay Vijay Annamalai Fact Check
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment