/indian-express-tamil/media/media_files/2025/03/06/gjDRVaz7PtGzlz8vVcSX.jpg)
நடிகர் விஜய்யின் விஜய் வித்யாஷ்ரம் பள்ளி விவசாய நிலத்தில் அமைந்துள்ளதாக குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், அதன்உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் விஜய் வித்யாஷ்ரம் பள்ளி விவசாய நிலத்தில் அமைந்துள்ளதாக குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், அதன்உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கினார். அண்மையில் அக்கட்சியின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறியது.
நடிகர் விஜய் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நடிகர் விஜய் நடத்தி வரும் விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் கீழ் மும்மொழிக் கொள்கை கற்பிக்கப்படுவதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், “ஒரு அழகான விவசாய கிராமத்தையே அழிச்சிருக்காங்க. இதுல எத்தனை விவசாய குடும்பம் பாதிக்கபட்ருபாங்க. சரி விவசாயத்த அழிச்சி பள்ளிகூடம் கட்டி குறைந்த கட்டணத்துலயாவது கல்வி தருவாங்கனு பாத்தா Pre-KG-கே ஆண்டுக்கு 46 ஆயிரம் கட்டணமாம். பரந்தூர்ல பேசுனதலாம் பொய்யா கோபால்??” என்ற கேப்சனுடன் நடிகர் விஜய்யை டேக் செய்து சமூக வலைதளங்களில் இரண்டு புகைப்படங்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
அதில், பள்ளி கட்டப்படுவதற்கு முன்பும் பின்பும் இருந்த படூர் கிராமத்தின் சாட்டிலைட் மற்றும் வான்வழி புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் அந்தப் புகைப்படம் குறித்தும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின் உண்மைத் தன்மை குறித்தும் நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
உண்மைச் சரிபார்ப்பு
இதுகுறித்து உண்மைத் தன்மையை கண்டறிய சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த இரண்டு புகைப்படங்களையும் தனித்தனியே ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்துள்ளனர். அப்போது, dronexl என்ற இணையதளம் 2020 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி வைரலாகும் அதே சாட்டிலைட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. அதில், “ஒன்றாக இணைக்கப்பட்ட நான்கு ட்ரோன் புகைப்படங்கள் யு.கே-வில் உள்ள தொலைந்த Gainsthorpe Medieval கிராமத்தின் சிறந்த வான்வழி காட்சியை வழங்குகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், Gainsthorpe Medieval கிராமம் குறித்து English Heritage என்ற இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இங்கிலாந்தில் உள்ள 2,000 அல்லது அதற்கு மேற்பட்ட கைவிடப்பட்ட Mediaval கிராமங்களில், லிங்கன்ஷையரில் உள்ள Gainsthorpe மிகவும் தெளிவாகக் காணக்கூடிய மற்றும் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்ட ஒன்றாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல் சாட்டிலைட் புகைப்படம் இங்கிலாந்தில் உள்ளது என்று தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, இரண்டாவது புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்துள்ளனர். அப்போது, 2018 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் - சிபிஎஸ்இ பாகலூர், ஓசூர் (Sri Vijay Vidyashram - CBSE Bagalur, Hosur) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் தங்களது பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா என்று குறிப்பிட்டு வைரலாகும் அதே புகைப்படம் பதிவிடப்பட்டிருந்தது. மேலும், அப்பள்ளியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் படி இக்கல்வி நிறுவனம் 1987 ஆம் ஆண்டு டி.என்.சி. சின்னசாமி என்பவரால் உருவாக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், Google Earth உதவியுடன் விஜய் வித்யாஷ்ரம் பள்ளி அமைந்துள்ள இடத்தை பல்வேறு ஆண்டுகளில் பின்னோக்கிச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அப்பள்ளி அமைவதற்கு முன்பாகவே அதனைச் சுற்றியுள்ள பகுதியில் கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இறுதியில், நியூஸ் மீட்டர் தேடலின் முடிவில் நடிகர் விஜய்யின் விஜய் வித்யாஷ்ரம் பள்ளி விவசாய நிலத்தில் அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தது என்றும், சமூக வலைதள பக்கங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
https://newsmeter.in/fact-check-tamil/actor-vijays-school-damage-agricultural-lands-744755
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.