நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெற்று ஜூன் 1 ஆம் தேதியுடன் நிறைவுற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன
இந்நிலையில், கோவை மக்களவை தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட அண்ணாமலை ஒரு பூத்தில் ஒத்த ஓட்டு மட்டும் வாங்கியதாக கூறி கடிதம் ஒன்றின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ‘BCUAF 07464’ என்கிற இயந்திரத்தில் அண்ணாமலைக்கு வெறும் ஒரு ஓட்டு மட்டும் கிடைத்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
/indian-express-tamil/media/post_attachments/4ab3f2fa-ff6.jpg)
இந்த நிலையில், சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் இந்தத் தகவலின் உண்மைத் தன்மையை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்துள்ளனர். இந்த செய்தி தொடர்பான உண்மைச் சரிபார்ப்பு (Newschecker.in ) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
/indian-express-tamil/media/post_attachments/a7a06e51-d8f.jpg)
முதலில், அண்ணாமலை ஒரு பூத்தில் ‘ஒத்த ஓட்டு’ மட்டும் வாங்கியதாக குறிப்பிட்ட புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் (image reverse search) முறைக்கு உட்படுத்தி தேடியுள்ளனர். இந்தத் தேடலில், தமிழக பா.ஜ.க இளைஞர் அணியின் சமூக ஊடகப் பொறுப்பாளர் பிரவீன்ராஜ் என்பவர் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று கூறி உண்மையான கடிதத்தின் படத்தை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருப்பதை கண்டறிந்துள்ளனர். மேலும், அந்தப் புகைப்படத்தில் BCUAF 07464 இயந்திரத்தில் அண்ணாமலைக்கு 101 வாக்குகள் கிடைத்ததாக குறிப்பிடப்பட்டு இருப்பதையும் கண்டறிந்துள்ளனர்.
/indian-express-tamil/media/post_attachments/0d6e2867-f4f.jpg)
இதுபற்றி தொடர் தேடலில், கோவை மக்களவை தொகுதி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை என்று சன் நியூஸ் வெளியிட்டிருந்த செய்தியில் வைரலாகும் அதே கடிதத்தின் புகைப்படம் பகிரப்பட்டு இருப்பதை கண்டறிந்துள்ளனர். அந்தக் கடிதத்திலும் BCUAF 07464 இயந்திரத்தில் அண்ணாமலைக்கு 101 வாக்குகள் கிடைத்ததாகவே குறிப்பிட்டு உள்ளனர்.
/indian-express-tamil/media/post_attachments/66d42d16-5a2.jpg)
இதன் அடிப்படையில், அண்ணாமலை ஒரு பூத்தில் ‘ஒத்த ஓட்டு’ மட்டும் வாங்கியதாக கூறி சமூக வலைதளத்தில் பகிரப்படும் கடிதத்தின் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர். மேலும், உண்மையான கடிதத்தின் படத்தையும், எடிட் செய்து மாற்றப்பட்ட கடிதத்தின் படத்தையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளனர்.
/indian-express-tamil/media/post_attachments/a950161b-ca8.jpg)
முடிவில், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவையில் தொகுதியின் ஒரு பூத்தில் ‘ஒத்த ஓட்டு’ மட்டும் வாங்கியதாக கூறி பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்றும், உண்மையில் அந்த பூத்தில் அவர் 101 ஓட்டு வாங்கியுள்ளார் என்றும் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக நிரூபித்துள்ளனர். எனவே, இதுபோன்ற தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்றும் நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த செய்தி தொடர்பான உண்மைச் சரிபார்ப்பு (Newschecker.in ) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“