சட்டைக்கு தானே தீ வைத்துக் கொண்டு பொய் புகார் கொடுத்த பா.ஜ.க பிரமுகர் கைது
மேட்டுப்பாளையத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் தன் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக பா.ஜ.க பிரமுகர் விஸ்வநாதன் புகார் அளித்த நிலையில்
விசாரணையில் விஸ்வநாதன் தன் சட்டைக்கு தானே தீ வைத்துக்கொண்டு நாடகமாடியது அம்பலம்.
மேட்டுப்பாளையம் குமரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன்(32). இவர் அன்னூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.
Advertisment
இந்த நிலையில் இவர் நேற்று தன் மீது பாஜக நிர்வாகிகள் பெட்ரோல் குண்டு வீசியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் மேட்டுப்பாளையம் பாஜக நகர தலைவர் உமாசங்கர் மற்றும் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக சட்டையில் தனக்கு தானே தீ வைத்துகொண்டு நாடகமாடி பொய் புகார் கொடுத்தது விசாரணையில் அம்பலமானது.
இதனையடுத்து பொய் புகார் கொடுத்த விஸ்வநாதன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
தனக்குத்தானே சட்டையில் தீ வைத்துக் கொண்டு பாஜக நிர்வாகிகள் மீது பொய் புகார் கொடுத்த வழக்கில் மற்றொரு பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“