கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையம் அருகே கொச்சி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது கருமத்தம்பட்டியைச் சேர்ந்த சசிக்குமார் என்பவர் சர்வீஸ் சாலையில் வந்தபோது காவல் உதவி ஆய்வாளர் போல் வாகன தணிக்கை செய்தவரைப் பார்த்தார். ஆனால் அவரது செயலில் சந்தேகம் அடைந்த சசிக்குமார் இது குறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.
அதன் பேரில் அங்கு வந்த போலீசார் உதவி ஆய்வாளர் உடையில் ஒருவர் நின்றுகொண்டிருந்ததை பார்த்து அவரிடம் விசாரித்தனர். அதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது விருதுநகர் மாவட்டம் மல்லங்கிணறு கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பதும் தெக்கலூரில் உள்ள நூற்பாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
மேலும் தெக்கலூர் லட்சுமி நகர் பகுதியில் வசித்து வரும் செல்வம் தான் காவல் உதவி ஆய்வாளர் என கூறி ஒரு பெண்ணையும் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து செல்வத்தை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செல்வம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த அவினாசி சாலை வழியாக முதல்வர் ஸ்டாலின் திருப்பூருக்கு பயணித்த நிலையில் செல்வம் பாதுகாப்பு அதிகாரியாக அங்கு பணியில் இருந்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஸ்டாலின் சென்ற சாலை வழியாக பயணித்த போது நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது போலியாக போலீஸ் போல் வேடமிட்டு இருந்தது காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை