சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை மிரட்டி, வசூலில் ஈடுபட்ட போலி ஐபிஎஸ் அதிகாரியை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் 4 வருடங்களுக்கு முன்பு பெண் மருத்துவர்கள் உள்ளிட்ட 9 பேரை ஏமாற்றி திருமணம் செய்த மோசடியில் சிக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2014ல் போலி ஐ.பி.எஸ் அதிகாரி வேடத்தில் 9 பெண்களை ஏமாற்றியபோது
சென்னை அயனாவரம் பழனி ஆண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலமணிகண்டன். இவர் 2014ம் ஆண்டு தான் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி எனக் கூறி, பெண் மருத்துவர், கல்லூரி மாணவி, பொறியாளர் என 9 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய வழக்கில் கைதானவர். பாலா, சூர்யா போன்ற பல்வேறு பெயர்களில், ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்து நிறைய பெண்களிடம் இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். சிங்கம் படத்தில் வரும் சூர்யா போன்று மீசையை வைத்துக்கொண்டு, பெண்களை காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்தபின், அவர்களிடம் இருந்து 250 சவரன் நகை மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் செல்வது இவரின் மோசடி கலைகளில் ஒன்று.
/tamil-ie/media/media_files/uploads/2018/07/44989028.jpg)
இந்த மோசடி மன்னன் தற்போது மீண்டும் மோசடி வேட்டையில் இறங்கியுள்ளதை அறிந்த போலீஸ் அவடை கைது செய்துள்ளனர். இவர் போலீஸ் அதிகாரி போல உடை அணிந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பொலிரோ ஜீப்பில் வலம் வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தன்னை ஐபிஎஸ் அதிகாரி சூர்யா என்று கூறிக்கொண்டு, பல இடங்களில் வசூல் செய்து வந்திருந்தார் பாலமணிகண்டன். இதையடுத்து அவரை கானாத்தூர் காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்து பொலிரோ காரையும் பறிமுதல் செய்துள்ளனர் .
முன்னதாக திருமண மோசடி வழக்கில் கைதான போது குண்டர் தடுப்புச்சட்டத்தில் அடைக்கப்பட்டதாகவும், சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர், மீண்டும் போலீஸ் அதிகாரி என மோசடி வேலைகளில் இறங்கி இருக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இவர் மீது அண்ணா நகர் காவல் நிலையத்தில் தற்போது 4 புகார்கள் இருப்பதாகவும், பிரபல நிறுவனங்கள், ஓட்டல்களில் ஐ.பி.எஸ் அதிகாரி என மிரட்டி பணம் வசூலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.