ஜெ. தீபா வீட்டுக்குள் வருமானத் துறை அதிகாரி போல் நுழைந்த போலி நபர் போலீசில் சரண்டைந்துள்ளார். தீபாவின் கணவர் மாதவன் தான் தன்னை நடிக்க சொன்னதாகவும் அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை சென்னை தி. நகரில் உள்ள ஜெ. தீபாவின் இல்லத்தில் நுழைந்த நபர், தன்னை வருமானவரித்துறையின் துணை ஆணையர் மித்தேஷ் குமார் என்று கூறினார். அவர்களின் வீட்டை சோதனையிட வந்திருப்பதாகவும் தெரிவித்தார். தகவலறிந்து போலீசாரும், செய்தியாளர்களும் தீபாவின் இல்லத்திற்கு சென்றனர். இதனால் பதற்றமடைந்த அந்த நபர், திடீரென சுவரேறிக் குதித்து தப்பி ஓடினார். இந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, தப்பிச் சென்ற நபரை பிடிக்க போலீசார் முழு வீச்சில் தேடுதல் வேட்டையில் இறங்கினர். போலி ஐடி அதிகாரியாக நடித்தவர் தப்பிச் சென்ற வேலையில், தீபா வீட்டில் இருந்த அனைத்து சிசிடிவி கேமராக்களும் வேறு திசையில் வைக்கப்பட்டிருந்தது போலீசாருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நேற்று இரவு சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் வருமானத் துறை அதிகாரி போல் நுழைந்த போலி நபர் சரணடைந்தார்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தன்னுடைய பெயர் பிரபாகரன் என்பதும், விழுப்புரம் மற்றும் பாண்டிச்சேரியில் ஹோட்டல் நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும். தனது கடைக்கு தீபாவின் கணவர் மாதவன் அடிக்கடி வந்ததாகக் கூறிய பிரபாகரன், சினிமாவில் நடிக்கவைக்க வாய்ப்புத் தருவதாக மாதவன் ஆசைக் காட்டியதாக தெரிவித்துள்ளார். பின்னர், மாதவன் தன்னை வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்குமாறு கூறி, கூரியர் மூலம் அடையாள அட்டையை அனுப்பியதாகவும், அதனை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வருமாறு தெரிவித்ததாக பிரபாகரன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
மாதவன் கூறியதால் நானும் அவர்களின் வீட்டிற்கு சென்று, அவர் கூறியபடியே தான் நடந்து கொண்டதாகவும் பிரபாகரன் தெரிவித்துள்ளார். அந்த வீட்டில் சோதனைக்கான ஆவணத்தையும் மாதவனே வழங்கி, பின் தீபாவுக்கும் போன் செய்து வருமான வரித்துறை சோதனை நடப்பதாக கூறியதால, தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
Police arrest the fake Income Tax officer who tried to conduct a raid in Jayallitha's niece J.Dheepa's house. pic.twitter.com/Be6nHEYKZV
— Savukku_Shankar (@savukku) February 12, 2018
பின்பு, தீபாவின் வழக்கறிஞர், ஊடகங்கள் மற்றும் போலீசார் வந்ததால் தனக்கு மிகவும் பதற்றம் ஏற்பட்டதாகவும், அதனை மாதவனிடம் கூறியபோது, அருகில் இருந்த சந்து வழியே தன்னை தப்பிச் செல்லுமாறு அவர் கூறியதாகவும் பிரபாகரன் தெரிவித்துள்ளார். தீபாவிடம் இருந்து பணம் பறிப்பதற்கு திட்டமிட்டே, மாதவன் இத்தகைய செயலில் ஈடுபட்டதாகவும், அதற்கு தன்னை பயன்படுத்திக் கொண்டதாகவும் பிரபாகரன் போலீசாரிடம் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டிற்கு, தீபாவின் கணவர் மாதவன், பதில் அளிக்க மறுத்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.