மருத்துவ கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள போலி இருப்பிட சான்றிதழுடன் வந்த 9 மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாக புகார் வந்துள்ளது. அது நிருபிக்கப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாடு முழுவதும் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர்களை சேர்க்க வேண்டும் என மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து தாமதமாக விழித்துக் கொண்ட தமிழக அரசு ஓராண்டுக்கு விலக்குக் கேட்டு அவசர சட்டம் கொண்டு வந்தது. ஆனால் அதை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது.
நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்று எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிலர் சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், கிராமப்புற மாணவர்கள் பணம் செலவு செய்து நீட் தேர்வுக்கு தயாராவது கஷ்டம் என்றும் கல்வியாளர்கள் போராடி வருகின்றனர். இதை மாநில, மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.
மருத்துவ மாணவர்களின் தரப்பட்டியல் நீட் தேர்வில் அடிப்படையில், கடந்த புதனன்று வெளியிடப்பட்டது. இதில் முதல் 20 இடங்கள் பெற்ற மாணவர்களில் 15 பேர் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று மருத்துவ பொது கவுன்சிலிங்க் தொடங்கியது.
அப்போது மாணவர்களின் சான்றிதழ் சரி பார்க்கப்பட்டது. அப்போது 9 மாணவர்கள் கேரள் மருத்துவ கல்லூரியில் படித்து வரும் நிலையில் தமிழகத்தில் போலி இருப்பிட சான்றிதழுடன் விண்ணப்பித்து இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘மருத்துவ மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு இன்று தொடங்கியது. 9 மாணவர்கள் போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்திருப்பதாக புகார்கள் வந்துள்ளது. இது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கவுன்சிலிங்க் நடக்கும் போதே, இருப்பிட சான்றிதழ் சரிபார்க்க தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது போல மாநில ஒதுக்கீட்டில் வெளி மாநில மாணவர்கள் போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்து சேர்ந்த பிரச்னை நடந்து கொண்டு இருக்கிறது. எனவே தமிழக அரசும் கவனமுடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.’’ என்றார்.
ஆனால், போலி இருப்பிட சான்றிதழுடன் வந்தவர்கள் யார் என்ற விபரம் எதையும் அவர் வெளிடவில்லை.
இதையடுத்து சென்னை மாநகர போலீசில் போலி சான்றிதழ் குறித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நீதி மன்ற கண்டனம்