கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தப்பட்டு மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் இதுவரை 11 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவ்விவகாரத்தை விசாரிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் கே.பவானீஸ்வரி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) மற்றும் சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் செயலர் ஜெயஸ்ரீ தலைமையிலான பல்நோக்கு குழு விசாரணை (எம்.டி.டி) நடத்தப்படுகிறது.
இந்நிலையில், நேற்று பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை அதிகாரிகள் சந்தித்தனர்.
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஆலோசனை செய்தனர். செய்தியாளர்களிடம் பேசிய ஜெயஸ்ரீ முரளிதரன் கூறுகையில், போலி என்சிசி முகாம்களில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து பெற்றோர்கள், குழந்தைகள் தன்னை அணுகி புகார் அளிக்கலாம் என்றார்.
“மனநல மருத்துவர்களின் உதவியுடன் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க MDT குழு மாநில அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“