தமிழகத்தில் திங்கட்கிழமை ஒரே நாளில் 3,715 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 1,55,371 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது . தமிழகத்தில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்றால் ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,926 ஆக உயர்ந்துள்ளது.
ஊரடங்கில் அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் கொரோனா பரவாமல் தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தினசரி பாதிப்பை பொறுத்தவரையில், கோயம்புத்தூரில் அதிகபட்சமாக ஒரே நாளில் 436 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 330 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் 250 பேருக்கும் குறைவாக தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. சென்னையில் புதிதாக 214 பேருக்கும், திருச்சியில் 157 பேருக்கும், மதுரையில் 73 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 28 மாவட்டங்களில் இரட்டை இலக்க எண்களில் பாதிப்பு பதிவாகியுள்ளது. 15 மாவட்டங்களில் 50க்கும் குறைவான பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பெரம்பலூரில் குறைந்தபட்சமாக 20பேருக்கும், திருப்பத்தூரில் 21பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா குறைந்து வருவதால், கோவிட் வார்டுகளில் படுக்கைகள் காலியாக உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் 4,080 பேர் தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளனர். கோயம்புத்தூரில் 2,992 பேரும், சென்னையில் 1,937 பேரும், தஞ்சாவூரில் 1,936 பேரும் சிகிச்சையில் உள்ளனர். 10 மாவட்டங்களில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1000க்கும் கீழ் பதிவாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 171பேரும், திருப்பத்தூரில் 217பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 227 பேரும் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர்.
புதுச்சேரியில் மூன்று மாதங்களுக்கு பிறகு கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2000த்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 101 நபர்களுக்கும், காரைக்காலில் 7 நபர்களுக்கும், ஏனாமில் 3 நபருக்கும், மாஹேவில் 17 நபர்களுக்கும் என்று மொத்தம் 128 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரி மாநிலத்தில் 1 நபர் உயிரிழந்ததையடுத்து மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1762-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1871 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, 1,14,454 நபர்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 1,18,087 நபர்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.