திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் நேற்று (செப்.3) வீட்டின் முன் மது அருந்தியவர்களை தட்டி கேட்டதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை போதை கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த செல்லமுத்து என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள 'X' பதிவில், "திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் வீட்டின் முன் மது அருந்தியவர்களை தட்டி கேட்டதற்காக மோகன்ராஜ் என்பவரையும், அவரது தாயார் சகோதரர் மற்றும் சித்தி என நான்கு பேரை குடும்பத்துடன், போதை கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விடியா அரசு பதவியேற்றதிலிருந்து நாள்தோறும் நம் மாநிலம் கொலை கொள்ளை என கொலை மாநிலமாகவும், சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்த தமிழகமாகவும் , போதை பொருட்களின் தலைநகரமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது, இதனை சரி செய்ய வேண்டிய இடத்தில் உள்ள முதலமைச்சரோ வெற்று விளம்பரத்தில் மட்டும் தனது முழு கவனத்தையும் செலுத்தி கொண்டிருப்பது வெட்கக்கேடானது.
காவல் துறையை கையில் வைத்துக் கொண்டு மக்களைக் காப்பாற்ற துப்பு இல்லாமல், நிர்வாக திறனற்ற பொம்மை முதலமைச்சருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனியாவது காவல் துறையை தனது ஏவல் துறையாக மட்டும் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி, சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டுமென்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
மேலும் இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த விடியா அரசை வலியுறுத்துவதோடு, உயிரிழந்த மோகன்ராஜ் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் , வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.