Advertisment

வேளாண் சட்டங்கள் வாபஸ்: மக்களாட்சிக்கான வெற்றி… பிரதமருக்கு தலைவர்கள் ரியாக்ஷன்!

பிரதமர் நரேந்திர மோடி 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்ததையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இது அநீதிக்கு எதிரான வெற்றி, விவசாயிகளுக்கு வாழ்த்துகள் என்று கூறினார். அதே போல, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இது மக்களாட்சிக்கான வெற்றி என்று தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Farm laws issue, Farm laws repealed, three farm laws repeal, political leaders reactions to pm modi announcement, cm mk stalin, thirumavalavan, dr ramadoss, k balakrishnan, mutharasan, vaiko, வேளாண் சட்டங்கள் வாபஸ், பிரதமர் மோடி அறிவிப்பு, மக்களாட்சிக்கான வெற்றி முக ஸ்டாலின், திருமாவளவன், டாக்டர் ராமதாஸ், கே பாலகிருஷ்ணன், முத்தரசன், வைகோ, farm laws, farmer potest, india, bjp, congress, dmk, vck, cpi, cpm, pmk, mdmk

மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லி எல்லையில் கிட்டத்தட்ட ஓராண்டாக போராடி வந்த நிலையில், 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை காலை அறிவித்தார். இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

பிரதமர் நரேந்திர மோடி 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்ததையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இது அநீதிக்கு எதிரான வெற்றி, விவசாயிகளுக்கு வாழ்த்துகள் என்று கூறினார். அதே போல, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இது மக்களாட்சிக்கான வெற்றி என்று தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.

இடைவிடாத போராட்டமே ஒன்றிய அரசை இறங்கி வர வைத்திருக்கிறது.

சட்டங்களைத் தொடக்க நிலையிலேயே திமுக எதிர்த்தது; வழக்கும் தாக்கல் செய்தோ; போராட்டங்களை முன்னெடுத்தோம்.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக அதிமுக பரப்புரையில் ஈடுபட்டு தனது அடிமை விசுவாசத்தைக் காட்டியது.

கழக ஆட்சி அமைத்ததும் 28.08.2021 அன்று சட்டப்பேரவையில் மூன்று சட்டங்களையும் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றினோம்.

இந்த வெற்றிக்குக் காரணம் உழவர் பெருங்குடி மக்களின் தியாகம்தான். இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளார்கள்.

உழவர்கள் போராட்டம் வேகம் எடுக்கக்கூடும் என்றோ அல்லது சட்டப்பேரவைத் தேர்தல்களை மனதில் வைத்தோ இம்முடிவை ஒன்றிய அரசு எடுத்துள்ளது.

சட்டங்களைத் திரும்பப் பெற நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயிரிழந்த விவசாயிகள் அனைவருக்கும் நிதியுதவி அளித்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட பிற மக்கள் விரும்பாத சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் லக்கிம்பூர்கேரியில் நடைபெற்ற படுகொலையினால் விவசாயிகளிடையே எழுந்த எதிர்ப்பை தணிக்கவும்தான் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் முடிவை பிரதமர் மோடி எடுத்திருக்கிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற வகையில், மூன்று வேளாண் சட்டங்களை கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் பா.ஜ.க. நிறைவேற்றியது. இதை எதிர்த்து எதிர்கட்சி உறுப்பினர்கள் கடுமையாகக் குரல் கொடுத்தார்கள். விவசாயிகளையோ, விவசாய சங்கங்களையோ கலந்தாலோசிக்காமல் விவசாயிகள் குறித்து சட்டம் இயற்றுவதற்கு பா.ஜ.க.விற்கு எந்த உரிமையும் இல்லை என்று அகில இந்திய விவசாயிகள் அமைப்பு கடுமையான போராட்டத்தை தொடங்கியது. கடும் குளிர், மழை, வெயில் என்று பாராமல் கடந்த ஓராண்டாக விவசாயிகள் தலைநகர் தில்லியில் போராடினார்கள். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். போராட்டம் நடத்திய விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தக் கூட பிரதமர் மோடி தயாராக இல்லை.

விவசாயிகளின் கோரிக்கையை துச்சமென மதித்த பிரதமர் மோடி திடீரென்று மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதென அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு விவசாயிகளின் நலனில் அக்கறையோடு செய்யப்பட்டதாக கருத முடியாது. சமீபத்தில் நடந்த இடைத் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியும், 5 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் உத்தரபிரதேசத்தில் லக்கிம்பூர்கேரியில் நடைபெற்ற படுகொலையினால் விவசாயிகளிடையே எழுந்த எதிர்ப்பை தணிக்கவுமே இந்த முடிவை பிரதமர் மோடி எடுத்திருக்கிறார். வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுகிற முடிவு ஒரு சந்தர்ப்பவாத நடவடிக்கையாகும். இதில் அரசியல் உள்நோக்கத்துடன் பிரதமர் மோடி செயல்பட்டுள்ளார்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுகிற முடிவை எடுக்க காரணமாக இருந்த விவசாய சங்கங்களுக்கும், அவர்களது கோரிக்கையை தேசிய அளவில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கும் கிடைத்த வெற்றியாகத் தான் கருத வேண்டும்.” என்று - கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

மூன்று வேளாண் விரோத சட்டங்கள் திரும்பப் பெறப்படுவது விவசாயிகளின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்றும் விவசாயிகள் விழிப்போடு இருக்கவேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.

மேலும், “ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும். உறுதி தளராமல் நம்பிக்கையுடன் தொடர்ந்து போராடினால்வெற்றி பெறமுடியும் என்பதற்கு விவசாயிகளின் போராட்டம் ஒரு சான்றாகியுள்ளது. களப்பலியான விவசாயிகளுக்கு எமது வீரவணக்கம்” என்று திருமாவளவன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். இந்த நடவடிக்கை வரவேற்கத் தக்கது. இது உழர்களுக்கு கிடைத்த வெற்றி என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “வேளாண் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். உழவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உழவர்கள் ஓராண்டாக கடுங்குளிர் உள்ளிட்ட கொடுமைகளை அனுபவித்து போராடினார்கள்; 150-க்கும் மேற்பட்ட உழவர்களை இழந்தனர். ஆனாலும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து சாதித்துள்ளனர். இது உழவர்களுக்கு கிடைத்த பெரும் வெற்றி!

உழவர்கள் முன்னேறினால் தான் நாடு முன்னேறும். இதைக் கருத்தில் கொண்டு கோதாவரி - காவிரி உள்ளிட்ட நதிநீர் இணைப்புகள், பாசனத் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். விளைபொருள் கட்டமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!” என்று தெரிவித்துள்ளார்.

வேளாண் விரோத சட்டங்கள் வாபஸ் பெறப்படுவது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி என்றும் விவசாயிகள் - தொழிலாளர்கள் - பொதுமக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகளைத் தெரிவிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை விடுத்துள்ளார். நவம்பர் 26ம் தெதி வெற்றி விழா கொண்டாட கட்சி அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் வகையிலும், இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பை சீரழிக்கும் வகையிலும், கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமான முறையிலும், நாடாளுமன்ற ஜனநாயக பண்புகளை மதிக்காமல் நரேந்திர மோடி அரசால் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவது என பிரதமர் அறிவித்துள்ளார். இது வரலாறு காணாத ஒன்றுபட்ட விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும். உலக வரலாற்றில் முன்னெப்போதும் கண்டிராத அளவு ஓராண்டு காலம் கொடுமையான கொரோனா பேரிடர், கடுங்குளிர், கொடுமையான கோடை வெயில், அரசின் அடக்குமுறைகள், தாக்குதல்கள் என அனைத்தையும் நெஞ்சுறுதியோடு போராடியது வீர வரலாறு படைத்த போராட்டமாகும். ஓராண்டு காலமாக ஒன்றிய அரசு மற்றும் பாஜகவின் அடக்குமுறைகளையும், அவதூறுகளையும் எதிர்த்து அமைதியான முறையில் போராடி வெற்றி கண்ட விவசாயிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனதார பாராட்டுகிறது. இந்த போராட்டத்தில் ஆரம்பம் தொட்டு உறுதியாக நின்றவர்கள் என்ற முறையில் இந்த வெற்றியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெருமகிழ்ச்சியடைகிறது.

அதேசமயம், பிரதமர் நரேந்திர மோடி இந்த சட்டத்தில் விவசாயிகள் விரோத அம்சங்களை நியாயப்படுத்தியும், விவசாயிகள் தான் அந்த சட்டத்தின் நன்மைகளை புரிந்து கொள்ளவில்லை என்று சொல்வதும் அவர் முழுமையாக மாறவில்லை என்பதையே காட்டுகிறது. லக்கிம்பூர்கேரி கொலைகள் உள்பட எந்தவொரு விவசாயின் கொலைக்கும், மரணத்திற்கும் முன்பும் சரி, இப்போதும் சரி ஒரு வருத்தத்தைக் கூட தெரிவிக்கவில்லை என்பது பாஜக அரசின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்துகிறது.

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நின்ற தொழிலாளர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறது. இந்த வேளாண் சட்டங்கள் கைவிட வேண்டுமென முதன்முதலில் தீர்மானம் நிறைவேற்றிய தோழர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள இடது முன்னணி அரசுக்கும், ஆட்சிக்கு வந்தவுடனேயே இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திமுக அரசுக்கும், இதேபோன்று தீர்மானங்களை நிறைவேற்றிய பிற மாநில அரசுகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.

கடந்த கால்நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்திய மக்களின் வாழ்வில் திணிக்கப்படும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் கிடைத்துள்ள முதன்மையான, முக்கியமான வெற்றி இது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் போராடுகிற மக்களுக்கு போராட்ட உத்வேகத்தை இந்த வெற்றி அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக முன்னுக்கு வந்துள்ள பொதுத்துறை மற்றும் அரசு சொத்துக்கள் விற்பனை, தொழிலாளர் உரிமைகளை மறுப்பதற்கு என்றே உருவாக்கப்பட்டுள்ள தொழிலாளர் விரோதச் சட்டங்கள் ஆகியவற்றிற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கும் இது மிகப் பெரிய உத்வேகத்தை அளிக்கும்.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தினக்கூலி உழைப்பாளிகள், ஆலை தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தொடக்க காலம் முதல் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வற்புறுத்தி ஆதரவு இயக்கங்கள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பிலிருந்த அஇஅதிமுக, நரேந்திர மோடி அரசின் மோசமான வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்ததுடன், சட்டமன்றத்திலும் அதற்கு ஈடான சட்டங்களை நிறைவேற்றியது தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இந்த போராட்டத்தில் கொல்லப்பட்டும், தாக்கப்பட்டும் மற்றும் பல்வேறு வகைகளில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த மரணங்களுக்கு ஒன்றிய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். விவசாயிகளின் இதர கோரிக்கைகளான மின்சார சட்டத்தில் மாறுதல் செய்வது, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது, விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்குவது, அரசு கொள்முதலை முழுமையாக நிறைவேற்றுவது ஆகிய கோரிக்கைகளையும் நரேந்திர மோடி அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

நவம்பர் 26 வெற்றி விழா

புதுதில்லியில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம் துவங்கிய தினமான நவம்பர் 26 அன்று “விவசாயிகளின் போராட்ட வெற்றி விழாவாக” தமிழகம் முழுவதும் கொண்டாட வேண்டுமென கட்சியின் அமைப்புகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

நாட்டின் வரலாற்றில் தனி முத்திரை பதித்த விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “விவசாயிகள் போராட்டம் மாபெரும் வெற்றி. மாபெரும் வெற்றி விவசாயிகளுக்கும், ஜனநாய சக்திகளுக்கும் வாழ்த்துகள். நாட்டின் வரலாற்றில் தனி முத்திரை பதித்த விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

கடந்த 2020, செப்டம்பர் மாதத்தில் பாஜக அரசு நிறைவேற்றிய மூன்று விவசாயிகள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு வேளாண் வணிகச் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி ஒராண்டுக்கும் மேலாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவும், ஐக்கிய விவசாயிகள் முன்னணியும் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தன.

இதன் தொடர்ச்சியாக 2020 நவம்பர் 26 “டெல்லி சலோ” (டெல்லி செல்வோம்) இயக்கம் அறிவிக்கப்பட்டது. இந்த நாளில் தலைநகர் டெல்லி நோக்கி சென்ற ஆயிரமாயிரம் விவசாயிகளை மத்திய பாஜக அரசும், ஹரியாணா, உத்தரப் பிரதேச மாநில அரசுகளும் விவசாயிகளை டெல்லி நகருக்குள் நுழையவிடாமல் திக்ரி, சிங்கு, காஸியாபாத் என நகரின் எல்லைகளில் வழிமறித்து, அடக்குமுறை தர்பார் நடத்தின. குளிர்காலத்தில் வந்த விவசாயிகள் மீது குளிர்ந்த தண்ணீரை பீய்ச்சி அடித்தது, கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. தடியடி நடத்தியது, நெடுஞ்சாலைகளில் அகழிகள் வெட்டியது. கூர்மையான ஆணிகளைச் சாலையில் நட்டது.

தடுப்புச் சுவர் அமைத்தது. பொய் வழக்குப் போட்டது. விவசாயிகளுக்கு எதிராக மற்றவர்களைத் தூண்டிவிட்டு மோதலை ஏற்படுத்தும் சதி வேலைகளில் ஈடுபட்டது. நக்சல்கள், மாவோயிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் என நாட்டின் எதிரிகள் ஊடுருவிவிட்டன என அவதூறு பரப்பியது. குடியரசு தினத்தில் (2021 ஜனவரி 26) டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியைச் சீர்குலைக்கும் சதிச் செயலில் ஈடுபட்டது.

இதன் உச்சமாக உத்தரப் பிரதேசம், லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது கார்களை ஏற்றிப் படுகொலை செய்தது எனத் தொடரும் மத்திய பாஜக, மாநில அரசுகளின் அடக்குமுறைகள், பிளவுவாதம் அனைத்தும் படுதோல்வி அடைந்துள்ளன. நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டங்களை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று முழங்கி வந்ததை நாடு எளிதில் மறந்து விடாது.

இந்த ஓராண்டு காலத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிர்களை பலி கொடுத்து நடந்த ஜனநாயக உரிமைப் போராட்டத்தை பஞ்சாப், கேரளா, ராஜஸ்தான், டெல்லி, சத்தீஸ்கர், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில மக்கள் ஒருமனதாக ஆதரித்து வந்ததையும், சட்டப் பேரவைகளில் தீர்மானங்களும், எதிர் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டதையும், தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்கள் நாடாளுமன்ற இயக்கத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றியதையும் விவசாயிகள் இயக்கம் நன்றியோடு என்றென்றும் நினைவுகொள்ளும்.

கார்ப்பரேட் ஆதரவு வேளாண் வணிக சட்டங்களைத் திரும்பப் பெறுவது தவிர வேறு வழியில்லை என்ற நிர்பந்தத்தை உருவாக்கி, மத்திய அரசைப் பணியவைத்த ஜனநாயக சக்திகளுக்கும், உறுதி குறையாது போராடி வந்த விவசாயிகளுக்கும், விவசாயிகள் போராட்டத்தில் கலந்து செயல்பட்ட தொழிற்சங்க அமைப்புகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு நன்றி பாராட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.” என்று முத்தரசன்
தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுவது குறித்து ராஜ்ய சபா எம்.பி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகளின் போன உயிர்களை திரும்பக் கொண்டுவந்து சேர்ப்பாரா பிரதமர் மோடி என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், 'இனிமேல் இம்மாதிரி மக்கள் விரோத சட்டங்களை அதிகாரம் இருக்கின்ற வரையில் மத்திய அரசு கொண்டுவராது என்ற நிலையை விவசாயிகள் ஏற்படுத்திவிட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்திருப்பது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது இலட்சக்கணக்கான விவசாயிகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். மக்கள் சக்தியே ஜனநாயகத்தில் மகேசன் சக்தியாகும் என்பதை விவசாயிகள் நிருபித்திருக்கிறார்கள்.

ஓராண்டு காலமாக இலட்சக்கணக்கான விவசாயிகள் போராடினார்களே, நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்தார்களே, கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளை இழந்தார்களே, பிரதமர் மோடி அவர்கள் போன உயிர்களை திரும்பக் கொண்டுவந்து சேர்ப்பாரா? உயிரிழந்த ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் மத்திய அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும்.

பயிர்களைக் கணக்கிட்டு, கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு விவசாயிகளுக்கு தரவேண்டும். வரப்போகின்ற தேர்தலில் தோற்றுப் போவோம் என்கிற பயத்தில் பிரதமர் இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

சர்வாதிகாரத்தின் முதுகெலும்பு விவசாயிகளால் நொறுக்கப்பட்டுள்ளது. போராடிய விவசாயிகளுக்கு இந்த நாடே தலைவணங்குகிறது.

விவசாயிகள் ஒற்றுமை ஓங்கட்டும்! அவர்களின் உரிமைக் குரல் ஓங்கட்டும்! அவர்களுக்குத் தலைவணங்கி நன்றியும், பாராட்டும் தெரிவிக்கிறேன்.

இனிமேல் இம்மாதிரி மக்கள் விரோத சட்டங்களை அதிகாரம் இருக்கின்ற வரையில் மத்திய அரசு கொண்டுவராது என்ற நிலையை விவசாயிகள் ஏற்படுத்திவிட்டார்கள். போராடிய விவசாயிகளுக்கு வாழ்த்தையும், மத்திய அரசுக்குக் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Farmers Against Farm Laws Pm Modi Cm Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment