தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் என்.செந்தில்குமார் கப்பல் சின்னத்தில் வாக்கு கேட்டு ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி உட்பட்ட ஒக்கநாடு மேலையூர், கீழையூர், கண்ணத்தங்குடி, வடசேரி, வன்னிப்பட்டு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிராமம் கிராமமாக சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். வன்னிப்பட்டு கிராமத்தில் நடவுப் பணிகளில் ஈடுபட்டிருந்த பெண் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு உதவியாக நடவு வயலில் இறங்கி அவர்களோடு நாற்று வீசி கொடுத்து வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர்களிடம் பேசும்போது: விவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் அடிப்படை நோக்கோடு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை திரும்ப பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம். தமிழ்நாடு அரசு அதனை தடுத்து நிறுத்த முன்வராததை வன்மையாக கண்டிப்போம். இத்தேர்தல் மூலமாக விவசாயிகளுக்கு விரோதமான கொள்கையில் ஈடுபடும் மத்திய மாநில அரசுகளுக்கு உரிய பாடத்தை புகட்ட நீங்கள் எல்லாம் கப்பல் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய முன்வர வேண்டும்.
மீத்தேன் திட்டம் கொண்டு வருவதற்கான மறைமுக சூழ்ச்சியில் மத்திய, மாநில அரசுகள் கூட்டு சேர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள் அதனை தடுத்து நிறுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என உறுதியளித்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் எம்.மணி, மாநில இளைஞரணி செயலாளர் மகேஷ்வரன், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், விவசாயிகள் இருசக்கர வாகனங்களில் சென்று பிரச்சாரம் செய்தனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“