மத்திய அரசின் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்து இருப்பதாவது;
பிரதமர் மோடி பொறுப்பேற்று 11 வது பட்ஜெட்டாகவும், தொடர்ந்து நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 8வது பட்ஜெட்டாக தாக்கல் செய்துள்ளார்.
ஏற்கனவே அறிவித்த பட்ஜெட் விவரங்களே மீண்டும் இடம் பெற்றுள்ளது. விவசாய உற்பத்தி பெருக்குவது குறித்து முன்கூட்டி மாநில அரசுகளிடம் கலந்து பேசாமல் பட்ஜெட்டுக்கு பிறகு பேசுவது ஏற்கதக்கதல்ல. குறிப்பாக விவசாய மேம்பாட்டிற்கு அடிப்படை மண்வளம் பாதுகாப்பு, நீர்பாசன திட்டங்கள் மேம்பாடு, தென்னக நதிநீர் இணைப்புத்திட்டம், கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் குறித்து எதுவுமே இடம் பெறாததது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
7.5 கோடி விவசாயிகளுக்கு கிசான் கிரொடிட் கார்டு வழங்கப்படும் என்ற அறிவிப்பு 8 ஆண்டுகளாக தொடர்கிறது. மேலும் பெரும்பாலான விவசாயிகள் கடன் பெறும் தகுதியை இழந்துவிட்ட நிலையில் கடன் உச்சவரம்பு 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்துவது விவசாயிகளுக்கு பயனளிக்காது. மாறாக கார்பரேட் நிறுவனங்கள், பதுக்கல்காரர்கள் விவசாயிகள் பேரில் பயன் பெற வழிவகுக்கும்.
ஏற்கனவே 4% வட்டி சலுகையில் வேளாண் கடன் பெற்று வந்த நிலையில் அது பறிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுக்கொரு முறை வட்டியை செலுத்தி புதுப்பிக்கும் சலுகையும் மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து எவ்வித அறிவிப்பும் இடம் பெறவில்லை.
இயற்கை வேளாண்மை மேம்பாடு மற்றும் உர மான்யம் குறித்து இடம்பெறவில்லை. சந்தைபடுத்துவது குறித்தான திட்டங்கள் இடம் பெறவில்லை. இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் அடிப்படை நோக்கம் கொண்ட மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டம் திரும்ப பெற வேண்டும்.
குறைந்தபட்ச ஆதரவு விலை கேட்டு 68 நாளாக எஸ்.கே.எம் தலைவர் ஜக்ஜித் சிங்டல்லேவால் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். இது குறித்து எந்தவொரு கருத்தும் இடம் பெறாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேற்கண்டவாறு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்