/indian-express-tamil/media/media_files/2025/08/21/pr-pandian-nagai-sand-2025-08-21-21-01-43.jpeg)
கடல் முகத்துவார பகுதியில் இருக்கிற ஏரிகள் பாதுகாக்கப்பட வேண்டும். மண் குவாரிகள் அமைப்பதை கைவிட வேண்டும். முதலமைச்சர் உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட வேண்டும் என விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இன்று (ஆகஸ்ட் 21) நாகை மாவட்டம் பிரதாபராமபுரம் கிராமத்தில் மண் குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படும் ஏரியை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கள ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பி.ஆர் பாண்டியன் கூறியதாவது; “நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. இவ்வூராட்சியில் 4000 வீடுகள் உள்ளது. சுமார் 8000 வாக்காளர்கள் உள்ளனர். கிராமத்தை ஒட்டி 6 கிமீ தூரம் கடற்கரை உள்ளது. கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் வகையில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் நீள்சதுரத்தில் 3 ஏரிகள் பாதுகாப்பு அரணாக அமைந்துள்ளது. மழைநீர் மற்றும் காவிரி நீர் நிரப்பப்பட்டு நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனால் கடற்கரையை ஒட்டிய இக்கிராமத்தில் நிலத்தடி நீரை தான் சுவையான குடிநீராக பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் 100 ஏக்கர் பரப்பளவில் இரண்டு ஏரிகள் ஏற்கனவே மண் குவாரி அமைக்கப்பட்டதால் இரு ஏரிகளும் கடல் நீர் நிரம்பி நிலத்தடி நீரும் உப்புநீராக மாறி வருகிறது.
தற்போது ஊரின் நடுவே அமைந்துள்ள 50 ஏக்கர் பரப்பளவிலான ஏரியில் மண் குவாரிக்கு அனுமதி கொடுத்து மாவட்ட ஆட்சியரே நேரில் மண் விற்பனையில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் துணையோடு மண் மாபியாக்களோடு களமிறங்கி உள்ளார். இதற்கு எதிராக தீவிர போராட்டத்தில் களமிறங்கிய முன்னாள் ஊராட்சித் தலைவர் சிவராசு உள்ளிட்ட 15 பேர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, ஊரில் காவல்துறை குவிக்கப்பட்டு போர்க்களம் போல காட்சியளிக்கிறது. ஒட்டு மொத்த குடும்பங்களும் அச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஊராட்சி தலைவர் குடும்பத்தை குண்டு வீசி கொலை செய்வோம் என்று மிரட்டல் விட்டதால் குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அடுத்த சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்காக தன் உடல்நிலையை வருத்திக்கொண்டு அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறார். இன்னொரு பக்கம் நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆளுங்கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் புதுச்சேரி மாநிலம் எல்லையான வாஞ்சூரில் துவங்கி வேதாரண்யம் வாய்மேடு வரையிலும் ஒட்டுமொத்த கிராமங்களை சார்ந்த விவசாயிகள், பொதுமக்களுக்கு எதிரான திட்டங்கள் மூலம் மக்களை முதலமைச்சருக்கு எதிராக திசைதிருப்பி வருகிறார்கள். காவல்துறை அடக்குமுறை எல்லை மீறி வருகிறது.
சட்ட ஒழுங்கு பாதிக்கப்படுவதை பாதுகாப்பதற்கு முடியாத காவல்துறை மண் மாபியாக்களுக்காக 200க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டிருப்பது வேதனையாக உள்ளது. எனவே, முதலமைச்சர் உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட வேண்டும். கடல் முகத்துவார பகுதியில் இருக்கிற ஏரிகள் பாதுகாக்கப்பட வேண்டும். மண் குவாரிகள் அமைப்பதை கைவிட வேண்டும். பிரதாபராமபுரம் ஊராட்சி தலைவர் சிவராசு குடும்பத்திற்கும், கிராம மக்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க முன்வர வேண்டும். முதலமைச்சர் இவர்களது பாதுகாப்பிற்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.
இதே நிலை தொடருமேயானால் ஒட்டுமொத்த காவிரி டெல்டா மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு தீவிரமான போராட்டத்தில் பிரதாபராமபுரம் மக்களுக்கு ஆதரவாக களமிறங்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.” இவ்வாறு பி.ஆர் பாண்டியன் கூறியுள்ளார்.
இன்றைய ஆய்வில் மாநில அமைப்பு செயலாளர் நாகை எஸ். ஸ்ரீதர், மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடேஷ், கீழையூர் ஒன்றிய செயலாளர் அருணகிரி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.